போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :

    திரு வெ. இறையன்பு இ.ஆ.ப அவர்களின் “போர்த் தொழில் பழகு” புதியத்தலைமுறையில் தொடராக வந்த போதே சில அத்தியாயங்கள் படித்ததுண்டு. அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது, அவரது சிந்தனைகளைப் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த எதிர்பார்ப்பை சற்றும் ஏமாற்றவில்லை இந்தப் புத்தகம். நான் அவரது எழுத்துக்களின் தீவிரமான அபிமானி. அவரது எழுத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு நான் பெரியவனா..? என்பதே எனக்கு அச்சம். இருப்பினும் முயற்சித்திருக்கிறேன்.


நிறைய விடயங்கள் எழுதி இருக்கிறார். சூழ்ச்சிகளும் வஞ்சனைகளும் நிறைந்த இன்றைய உலகில் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் எனில், போர்த் தொழில் பழகுதல் அவசியம் என்கிற முன்னுரையே முத்தாய்ப்பு.

உத்திசாலி (stratagist) என்ற வார்த்தையே நமக்குப் புதியதாக இருக்கிறது. தனக்கு பணியில் இன்னல் தந்த நபர்கள், தாம் அதனை முறையாக எதிர் கொண்ட விதங்கள் போன்றவற்றையும் எழுதி இருந்தார். அலெஃஸாண்டரைப் போரஸ் எதிர் கொண்ட விதம்.., வெறும் வரலாறாகப் படிக்கும் போது, ஒருப் பெரிய விசயமாகப் படுவதில்லை. ஆனால், அதனை சம்பவங்களின் தொகுப்பாக விவரிக்கும் போது, நமது மூதாதையர்கள் எவ்வளவுப் பெரிய போராளிகளாக இருந்திருக்க வேண்டும் என பிரமிப்பு அடையச் செய்கிறது.

     செல்யூகஸ் நிகேடரை சந்த்ர குப்த மௌரியர் வெற்றி கொண்ட விதம், அமைத்த யுத்த வியூகங்கள், யானைக்கு அணிவித்திருந்த கவசங்கள்,.. போன்றவை வரலாற்றைப் படிக்க விரும்புபவர்களுக்கு சுவாரசியமானவை. மேலும், சந்திர குப்தர் படையினுள் அதே சீருடையில் ஊடுருவி இருந்தார்கள்  எதிரிப் படையினர் என்றத் தகவல்.., மனிதர்களில் எல்லாக் காலங்களிலும் இப்படியானத் துரோகிகள் இருந்திருக்கிறார்களே என்று ஆச்சர்யம் அளிக்கிறது.

     ராஜேந்திரச் சோழன் ஒரே அடியில் ஒரு யானையை வீழ்த்தினார் என்பதை அறியும் போது பெரும் ஆச்சர்யம். நாம் இன்றுத் தமிழர்களாக இந்தியாவில் வாழ்வதற்கு இது போன்ற வீர மன்னர்களின் பாதுகாப்பு இருந்தமைதான் காரணம் என்றுச் சொல்லலாம். இல்லை என்றால் தமிழ்இனம் மறுவிப் போய் விட்டிருக்கும். ஆனால், இன்னும் பலத் தமிழ் மன்னர்களைக் குறிப்பிட்டு இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. முக்கியமாக மாமல்ல நரசிம்மனின் வாதாபிப் படையெடுப்பு, அதற்கான பல வருடத் திட்டமிடல்.., பிற்கால சோழப் பேரரசை நிறுவுவதற்காக தள்ளாத வயதில், மற்றவர் தோளில் அமர்ந்து போரிட்ட சோழ மன்னன், கரிகால் சோழனின் பெருங்கோபம், அவரதுப் படையெடுப்புகள் போன்றவற்றை எழுதியிருக்கலாம்.
  இதனை எழுதுவதற்காக அவர் வாசித்திருந்த புத்தகங்களின் எண்ணிக்கை மலைப்பைத் தருகிறது.., அவ்வளவையும் படிப்பதற்குப் நிகராக நாம் இந்தப் புத்தகத்தை மட்டும் படித்து விடலாம். சந்தர்ப்பம் அமைந்தால் அவசியம் ஒரு முறையாவது வாசியுங்கள். விலை அதிகமாகப் படவில்லை. ( நண்பரிடம் இரவல் பெற்ற புத்தகம் தானே..,)


Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2