அழகுராசு காதல் கதை -1

     நம்ம அழகுராசுப் பயலுக்கு, என்னப் பாடுபட்டாச்சும் ஏதாவது ஒரு புள்ளைய காதலிச்சுக் கலியாணம் பண்ணிகிடனும்கிறது  ஒரு காலத்துல வாழ்நாள் லட்சியமா இருந்திச்சு!! ரெண்டு வீட்டுலயும்  எல்லாருமே ஒத்துக்கிட்டாக்கக் கூட இவன் ஒத்துக்கிடாம, என்னமாச்சும் காரணம் கண்டுக்கிட்டு,  வீட்ட எதுத்துதேன்  கலியாணம் பண்ணனுமின்னு ஒரே.. வீம்பாத் திரிஞ்சிக்கிருந்தான் பயபுள்ள!. தமிழ் சினிமாக்கள் நிறையப் பார்த்ததினாலையோ என்னம்மோ,  நல்லாருந்தப் பயலுக்கு இப்புடி ஒரு கிறுக்குப்  புடிச்சுக்கிருச்சி. 

  சின்னப் புள்ளையா இருந்தப்பவே கூடப் படிச்ச ஒரு கிறித்தவப் பொண்ணு மேல ஒரு தனிப் பிரியம் பயலுக்கு!!. ( Puppy Love?) ஆனா படிக்கறதுக்காக வேற ஊருக்கு  போனதுக்கப்புறம் அந்த பொண்ணுக்கு என்னா ஆச்சின்னு கண்டுபிடிக்கறதுக்கு அவனுக்கு தங்கர் பச்சான் அளவுக்கு வாய்ப்புக் கெடைக்கல. அழகிப் படத்தப் பாத்து ஒரு தடவ ஆத்தாமைப் பட்டுக் கிட்டதோடச் சரி!! ஆட்டோக்ராப் படமெல்லாம் கூட செயிச்சதுக்குக் காரணம் நம்ம அழகுராசு மாதிரி, "நெஞ்சம் மறப்பதில்லை" டைப்பு ஆளுங்கத்தான். 



      சரி,... இவ்வளவு சின்ன வயசிலேயே காதலிச்ச மொத ஆளு நாமாத்தான் இருப்போமிண்டு, கித்தாப்பா ஒரு தடவ அழகுராசுப்பய, தன்னோட நட்பு வட்டத்துக்கு நடுவுல, பெருமையா சொல்லுதான்.... " நாங்கல்லாம் அஞ்சாப்பு படிக்கும் போதே காதலிச்சவிங்கப்பெய்"-ன்னு,  நட்புவட்டத்துல மூலையில ஒக்காந்து இருந்த ஒரு பெரிசு சொல்லுச்சு.... " போங்க பாசு, நீங்க ஒரு வருஷம் லேட்டு" ன்டு. எல்லாருமே என்னைய விட அயோக்கியனுங்க தானாப்பு?! நான் கொஞ்சம் நல்லவந்தான் போலருக்குன்னு நெனச்சுக்கிட்டான். 

   சரி, அது போகட்டுமிண்டு, அடுத்த முயற்சியா, பெரிய பள்ளிகோடத்துல பத்தாப்பு  படிக்கிறப்ப, ஒரு பொண்ணு மேல ஒரு கண்ணு. அப்பமெல்லாம் காதல்ங்கறது உலக மகாக் கெட்ட வார்த்த. அது என்னடான்னா அப்பப் பாத்து பள்ளிகோடம் பூராப் பயலுக்கு "ரெம்ப நல்லாப் படிக்கற பய"-ன்டு பேரு. அந்தப் பேர கெடுத்துக்க வேண்டாமுண்டு பயலுக்கு கொஞ்சம் பயமா இருந்ததில அதப் பத்தி எந்த முயற்சியுமே எடுத்துக்கல...  (இல்லையின்னாலும் அந்தப் பொண்ணு திரும்பிக் கூடப் பாத்துருக்க மாட்டா...ங்கறது வேற விஷயம்...!!!) அதுக்கப்புறம் அந்த பொண்ணு பக்கத்தில இருந்த காலேஜிலப்  படிச்சுட்டு காதலிச்சுக் கலியாணம் செஞ்சுக்கிட்டதாக் கேள்வி. இந்த எல்லா சமாச்சாரமும் அரசால் புரசலாத் தெரிஞ்ச அழகுவோட அக்கா அவனக் கூப்பிட்டு " டேய் அந்த செல்வராணிக்கு கலியானமாம்டா, தெரியுமா? "ன்னு கேக்குதாக.... "அது யாரு செல்வரானி?"ன்னு திருப்பிக் கேக்குதான்...  "அவதாண்டா.... என்னோட கிளாசுமேட்டு சாரதாவோடத் தங்கச்சி ஓங்கூடத் தானேப்  படிச்சா?...."ன்னு சொல்லுதாக.. "ஓ.... அந்தப் பொண்ணா? அவ அப்பவேப் பெரிய ராங்கிக் காரியாச்சே ... அவளல்லாம் கட்டிக்கிட்டுப் பாவம்,   எவன் சின்னப் படப் போறானோ?" ன்டு ஒன்னுமேத் தெரியாதவன் மாதிரி சமாளிச்சு வச்சிட்டான். 


  அதுக்கப்புறம் ஒருக்கா என்னடான்னா,...?! ( அடுத்த பாகத்தில் தொடரும்...)

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :