பயணங்களும் சில சிந்தனைகளும்
சிலப் பயணங்களின் பொது நாம் காணும் சிலக் காட்சிகள் நம்மை
பல்வேறு விதமாக யோசிக்க வைத்து விடும் அது போன்ற
சிந்தனைகளின் வடிவமே இந்தப் பதிவு...
- பிரபல ஆலயம் ஒன்றில் அந்த ஆலய நிர்வாகியின் புகைப்படத்தை விவேகானந்தருக்கும் வள்ளளாருக்கும் நடுவில் அச்சிட்டு விளம்பரம் செய்து இருந்தார்கள். விவேகானந்தரும், வள்ளளாரும் தங்களது முகத்தைத் தாங்களே விளம்பரம் செய்து கொள்ள நேர்ந்ததாகப் படித்ததில்லை. அடக் கொடுமையே என நினைத்தேன். இன்னொருப் பக்கம் நேதாஜி,மற்றும் காந்திஜிக்கு நடுவே மற்றொருவர் படம் ( அந்த ஊரிலெயே அவரை நிறையப் பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை). என்னதான் சொல்ல வருகிறார்கள் இவர்கள் என்றேப் புரியவில்லை.
நாடோடிகள் திரைப்பட நகைச்சுவை நினைவுக்கு வந்தது.
- ஒரு தட்டி விளம்பரம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு தலைவரின் நினைவு நாளை, “சாதி ஒழிப்பு??” தினமாகக் கொண்டாடுவதாக ஒரு விளம்பரம். அந்த சாதியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் கடலெனத் திரண்டு வரவேண்டும் என்ற அழைப்பு. “பழகிப் பார் பாசம் தெரியும், பகைத்துப் பார் வீரம் புரியும்” என்று punch dialogue கள் வேறு. தமிழகத்தின் அடிப்படைக் கல்வி கட்டமைப்பை உயர்த்திய காமராசர் ஐயாவையும், நேதாஜியுடன் பற்றுதல் கொண்டு நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட முத்துராமலிங்கம் ஐயா அவர்களையும் சில சமூகத்தவர் மட்டுமே கொண்டாடுவது அவர்களின் புகழைக் குறைப்பது போன்றது என்பது நம்மவர்களுக்குப் புரிவதேயில்லை. அடுத்தத் தலைமுறை மக்களுக்கு இவர்கள் ஏதோ ‘முற்காலத்தில் வாழ்ந்தச் சாதியத் தலைவர்கள்’ என்ற எண்ணம் தோன்றி விடாதா?
நல்ல வேளை பெரியாரை அவரது சாதி என்று
நினைப்பவர்கள் கொண்டாடாமல் விட்டார்கள்.
- மதுபோதையில்சுய நினைவின்றி சாலை விளிம்பில் கோணல்மாணலாக விழுந்து கிடப்பவர்களைப் பார்த்தால் நமக்கே வாகன ஓட்டுனர்கள் மீதுப் பரிதாபம் வருகிறது. சற்று வேகமாக வரும் போது அருகில் வந்தப் பின் கவனித்து, திடீரென வண்டியைத் திருப்ப முயற்சித்தால் விபத்து நேருமே என்ற அச்சம்.
- யார் தோளிலாவது சாய்ந்துக் கொண்டு பயணம் செய்யும் குழந்தை, சிலநேரங்களில் எதேச்சையாக நம்மைப் பார்க்கும். நாமும் அதைப் பார்த்தால் திரும்பிக் கொள்ளும். பிறகு மீண்டும் மெதுவாகத் திரும்பிப் பார்க்கும் நாம் அப்போதும் அதையேப் பார்த்தால் சட்டெனத் திரும்பிக் கொள்ளும்(என்ன நினைத்து கொள்ளுமோத் தெரியாது...!!).
- Geometry box ல் நீண்ட நாட்கள் பாதுகாக்கப் பட்ட ஐந்து ரூபாய்த் தாள் நமது கைக்கு வந்தால் அதனை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது சிலப் பயணங்களில்.....
- ஓரிரு சமயங்களில்.., நாமே தேவையான முகவரிக்குச் செல்லும் வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும்போது நம்மிடம் வந்து வழி கேட்பார்கள் சிலர்... அவர்கள் என்னக் கேட்கிறார்கள் என்றுத் தெரிந்துக் கொள்வதற்குப் பாஷை கூடத் தெரியாமல் விழிப்போம். வந்தவர்கள் நாமேப் பரவாயில்லை போலிருக்கு என நினைத்து நகர்வார்கள்.
- சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்களைப் பார்த்தால் கிலி பிடிக்கிறது. பேருந்து நிறைந்து, பின்புப் படியும் நிறைந்தாலும், அதன் பின்பும் அதில் பயணிக்கும் திறன் அவர்களுக்கு மட்டுமே உண்டு.
- ஒரு முறை, சற்று வயது முதிர்ந்தப் பேருந்து ஒன்றுத் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தது, அதன் பக்கவாட்டுக் கம்பிகளில் மூன்று நான்கு பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்றார்கள். ஒரு மாணவன் பின் சக்கரத்திற்கு நேர் மேலாகப் பேருந்தின் வெளிப்புறம் ஜன்னல் மீது காலை வைத்து கூரை மீது எந்தப் பிடிமானமும் இல்லாத அந்தப் பேருந்தின் மழை நீர் வழியும் தகரத்தினைப் பிடித்துக் கொண்டு சென்றான். பேருந்து நிற்கும்போது ஏறுவதோ, இறங்குவதோ இவர்களுக்கு மிகவும் அநாகரிகமான, பயந்தாங்கொள்ளித் தனமானச் செயலாகப் படுகிறது.
- எங்களது ஊரில் பேருந்துகளில் வழக்கமாகப் பிச்சை எடுக்கும் கண்பார்வையற்ற பெரியவருக்கு, அப்போதுதான் பேருந்து நிலையத்தினுள் வந்து நின்றப் பேருந்தினுள் பயணிகள் யாரும் இன்னும் ஏறவே இல்லை என்பதைக் நடத்துனர்களே அவரிடம் தெரிவித்து உதவுகிறார்கள். ஆனாலும் சில நேரங்களில் ஆளில்லாதப் பேருந்துளில் அவரது குரல் ஒலிக்கிரது. மின்சார ரயில்களில் பிச்சை எடுக்கும் கண் பார்வை அற்றவர்கள் என்ன செய்வார்கள்? தளமேடை ரயிலின் எந்தப்பக்கம் வந்து கொண்டிருக்கிறது? என்பவை எப்படித் தெரியும்?
இன்னும் இதுபோல் நிறைய உண்டு....
//யார் தோளிலாவது சாய்ந்துக் கொண்டு பயணம் செய்யும் குழந்தை, சிலநேரங்களில் எதேச்சையாக நம்மைப் பார்க்கும். நாமும் அதைப் பார்த்தால் திரும்பிக் கொள்ளும். பிறகு மீண்டும் மெதுவாகத் திரும்பிப் பார்க்கும் நாம் அப்போதும் அதையேப் பார்த்தால் சட்டெனத் திரும்பிக் கொள்ளும்(என்ன நினைத்து கொள்ளுமோத் தெரியாது...!!).//
ReplyDeleteAwesome ...! மிக நுட்பமான ரசனை .... Like it
நன்றி..!! இன்று மின்னஞ்சலைத் திறந்ததும், மிகையாக உங்களதுப் பின்னூட்டங்களைக் கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்.
Delete