விவசாயமும் புதுமைகளும்
இந்தப் பதிவு சில வாரங்களுக்கு முன்பே எழுதத் திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால்
தண்ணீர் இல்லாமல் தமிழ் நாடேத் தவித்துக்
கொண்டிருக்கையில் எழுதுவது சற்று முரணானது என நினைத்ததால் வடகிழக்குப் பருவமழை
துவங்கி விட்டிருக்கும் இந்த நேரத்தில் மகிழ்வுடன் இந்தப் பதிவு...,
நீர்ப் பாசனம்:
விவசாயம் செய்வதில்
தற்போது காண்கிறப் புதுமைகள் வேலைகளைச் சுலபமாக்கி உள்ளன. உதாரணமாகச் சில
விசயங்களைச் சொல்லலாம். முன்பெல்லாம் மும்முனை மின்சாரம் எப்போது வரும் என்றுப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதிகாலையில் இருட்டிலேயே நிலத்திற்குச் சென்று
நீர் இறைப்பதுண்டு. ஆனால் தற்போது condenser என்ற உபகரணம் மூலம் இருமுனை மின்சாரம் இருக்கும்போதும் மோட்டாரை இயக்க
முடிகிறது. (இது சட்ட விரோதமா எனத்
தெரியவில்லை. ஆனால் அதைப் பயன்படுத்துவதற்கு இருமுனை மின்சாரம் கூட இருப்பது இல்லை).
டீசல்
நீரிரைப்பு இயந்திரம் பயன்படுத்துவோற்கும் எண்ணை விலை பயமுறுத்தும் விசயமாகவே
உள்ளது. இந்த மாற்று முறைகள் கிணற்றுப் பாசனம் கொண்ட விவசாயிகளுக்கு மட்டும்தான்.
ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி இருக்கும் விவசாயிகளுக்கு வேறு மாற்று வழியேக்
கிடையாது.
நீர்மூழ்கி
மோட்டார்கள் வந்துவிட்டபடியால், வெயில் காலத்தில் மோட்டாரை கீழே இறக்க வேண்டும்,
மழை காலத்தில் மேலே உயர்த்த வேண்டும் என்கிறத் தேவை இல்லை.
மேலும் நீண்ட தூரங்களுக்கு, வாய்க்கால்களை, அடிக்கடி சீவிக் கொண்டிருக்க
வேண்டியதில்லை. ஒரு முறைச் சிறிது பணம் முதலீடு செய்து, PVC குழாய்கள் பதித்துக் கொண்டால் நீங்கள் விரும்பும் வயலுக்கு விரயமில்லாமல்,
நீர்ப் பாய்ந்து விடும்.
புதிய உபகரணங்கள்:
அடுத்ததாக
rotator எனப்படும் சாதனம். டிராக்டர்களுடன் இணைக்கப் படும் இந்த கலப்பை போன்ற சாதனம்
அடியுரங்களுடன் மண்ணை நன்குக் கலந்து நிலத்தை
விதைப்பிற்கு முன்பு சமன் செய்வதற்கு உதவுகிறது. நெல் அறுவடை இயந்திரம், நாற்று
நடும் இயந்திரம், சூரிய காந்தி அடிக்கும் இயந்திரம், மக்காச் சோளம் பிரிக்கும்
இயந்திரம், நன்செய் கலப்பை, புன்செயில் களையெடுக்கும் இயந்திரம், சொட்டு நீர்ப்
பாசனக் குழாய்கள், தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் போன்றவை நிறைய விவசாய வேலைகளை
எளிதாகவும், விரைவாகவும், சேதாரம் அதிகமில்லாமலும் முடிக்க உதவுகின்றன. பத்து
வருடங்களுக்கு முன்பு இத்தனை வேளாண் பொறியியல் கருவிகள் அறிந்திருக்கப் படவில்லை.
நவீனக் களைக் கொல்லிகள்
வெவ்வேறு
பயிர்களுக்கு, வெவ்வேறு விதக் களைகளுக்கு, வெவ்வேறுப் பருவங்களில் அடிக்கக் கூடிய
பல்வேறு களைக் கொல்லிகள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. அதனால் விவசாயக் கூலி
ஆட்களை களையெடுப்பிற்கு எதிர்பார்க்க வேண்டிய அவசியம் குறைந்திருக்கிறது.
(இரசாயணக் களைக்கொல்லிகளைப் பயன்படுத்துவது சுற்றுசூழல் பாதுகாப்பினைக் கவனத்தில்
கொண்டால், சற்று ஏற்புடையதல்ல என்பது வேறு விசயம்).
சிலப் பின்னடைவுகள்:
கால்நடைகளைப் பராமரிக்க மேய்ச்சல் நிலங்களும், தொடர்ந்த மனிதப் பராமரிப்பும் தேவை
என்கிற நிலையில் இயற்கை எருப் பயன்பாடு மிகவும் குறைவு. செயற்கை உரங்களே அதிகம்
பயன்படுத்தப் படுகின்றன.
விவசாயம் என்பது சமுதாயத்திற்கு
மிகவும் அத்தியாவசியம் என்ற எண்ணம் மாறித் தற்காலங்களில், இது வேறு வேலைத்
தெரியாதவர்களின் வேலை, கிராமத்தவர்களின் வேலை, இரண்டாம்தரமான வேலை என்கிறச்
சிந்தனைகள் மேலோங்கியுள்ளன. மேட்டாங்காடுகளாக இருந்தப் பல்வேறு மானாவாரிப் பயிர்
விளையும் நிலங்கள் தற்போது வீட்டு மனைகளாக மாற்றப் பட்டு விட்டன. விவசாயக் குடும்பத்தின்
அடுத்தத் தலைமுறை நகரங்களை நோக்கி விரைவாக நகர்ந்து
கொண்டிருக்கிறது. அல்லது விவசாயம் அல்லாத வேறு தொழிலை(ஓட்டுநராக, வியாபாரியாக,
பெருநகரங்களின் ஆலைகளில் தொடர்ந்த வருமானம் தரும் தினக்கூலியாக) நாடிச் செல்லும்
நிலை உள்ளது. விவசாயத்தை லாபகரமானதாக ஆக்க இன்னும் நிறையத் தூரம் செல்ல வேண்டும்.
செய்ய வேண்டியன:
படித்தவர்களும்
விவசாயத்தை இளப்பமாக நினைக்கமல், பகுதி நேரமாகவேனும், விவசாயம் செய்ய முன்வர
வேண்டும். உண்மையில் விவசாயம் செய்வது சில வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை
விடத் தற்போது எளிதாகி உள்ளது. உடல் உழைப்பு மிக மிகக் குறைவு. ஒரு கற்பனைக்காக
சிந்திப்போம், நாம் கிணற்று நீரை ஏற்றம்,
சால், எருதுகள் மூலம் இரைத்து இப்போது விவசாயம் செய்வதாக இருந்தால் எப்படி
இருக்கும்? நினைக்கவேத் திகைப்பாக இருக்கிறது. வாய்க்கால் நனைந்து, நிறைந்து,
பாத்தியை அடைந்து, ஒரு பாத்திக்கு நீர் இறைக்க ஒரு நாளாகி விடும்.
இன்னும்
இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் “மிகவும் நவீன சுழன்றும் ஏர்ப்” பின்னது உலகம்
இருந்துதான் ஆக வேண்டும் அல்லவா...!!
Comments
Post a Comment