இப்படியும் இருக்குது இந்தியா – 2


கு(மு)டியாட்சி :
      நமது ஜனநாயக அமைப்பு மெல்ல மெல்ல அரசியல்வாதிகளால் ஒரு மன்னராட்சி முறையைப் போன்று மாற்றப்பட்டு விட்டது. நம்மால்  பதவியில் இருக்கும் எந்த ஒரு அரசியல்வாதியையும் (வார்டு கவுன்சிலர் தொடங்கி), அரசு அதிகாரியைக் கூட ஒரு தவறுக்காகத் தட்டிக் கேட்டுவிட முடியாது. ஆள்பலம், அதிகார பலம், பண பலம் பாயும்.

வாரிசு அரசியல் முறை:
            ஒரு பிரபல அரசியல்வாதியின் மகன் என்றால் பெரும்பாலும் அவர் அரசியல்வாதியாகவே இருப்பார். அல்லது அரசியல்வாதியாகக் கொண்டுவரப்படுவார் (இந்தியா முழுவதிலும்)  மன்னராட்சியில்தான் இளவரசு முறை இருந்தது. அந்த இளவரசரும் கூட, போர்க்கலைகள் அனைத்திலும் வல்லவராக இருந்தாக வேண்டும், மேலும் நல்ல நிர்வாகியாகவும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால் அவர் வீழ்த்தப்பட்டு மற்றொருவர் ஆட்சியைப் பிடித்துக் கொள்வார். துரதிருஸ்டவசமாக நமது ஜனநாயக முறைப்படி உருவாக்கப் படும் வாரிசு அரசியல்வாதிகளில் பலரும் வாரப் பத்திரிக்கையில் நகைச்சுவைத் துணுக்கு எழுதப் பயன்படும் நாயகர்களாகவே உள்ளார்கள்.

வயது வரம்பின்மை :
    மூன்றாவதாக அரசியல்வாதிகளுக்கு பணி மூப்பு என்பதேக் கிடையாது. வாழ்நாள் முழுக்க அர்ப்பணிப்புடன், தேச சேவை செய்வதே அவர்கள் பணி (அனேக நாடுகளில்). சில வட இந்திய மாநிலங்களில் ஒரே தலைவர் 15, 20 ஆண்டுகளாக முதல்வராக இருப்பதுண்டு. அவர்கள் சொல்வதே வேதம். இத்தகைய மாநிலங்களில் மக்களின் மனநிலை ஒரே மாதிரியாகவே உருவாக்கப் பட்டு விடும். அரசியல்வாதியாகத் தாராளமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் ஒருவர் அதிகபட்சமாக இத்தனை முறைதான் ஒரு அரசாங்கப்பதவி வகிக்க முடியும் என அரசாணை  உருவாக்கப் பட வேண்டும். அப்போதுதான் புதிய சிந்தனைக் கொண்ட ஒருவர் மாற்று விதத்தில் அரசாங்கத்தை நடத்த முடியும். முந்தையத் தலைவரின் நிறை குறைகள் என்ன என்பது வெளிப்படும். (குறைந்த பட்ச மகிழ்ச்சியாக வெவ்வேறு நபர்களாவது மக்கள் பணத்தை அனுபவிக்க முடியும்). இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிச்சயமாக வரலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வு சாத்தியமே. நம்மிடம் அத்தகைய வல்லுநர்களாக நிறையத் திறமைசாலிகள் உண்டு (IAS, IPS). ஆனால் அவர்கள் இனம் காணப்படுவதில்லை, பயன்படுத்தப்படுவதில்லை. ஓரம் கட்டப் படுகிறார்கள். நம்முடைய ஆட்சி முறையை உருவாக்கித் தந்தத் தலைவர்கள் இப்போது இருந்தால் கூட, தேர்தல் முறை மற்றும் அதிகாரம் வழங்கல் போன்றவற்றில் பல திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்திருப்பர்கள். 

பக்தி செலுத்தும் மனப்பான்மை :
  நமது மக்கள் தமது தலைவரின் மீது அளவு கடந்த, தேவைக்கு அதிகமான விசுவாசம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அல்லது அவ்வாறு இருக்க ஊக்குவிக்கப் படுகிறார்கள், இருப்பதாகச் சித்தரிக்கப் படுகிறர்கள். தீக்குளிப்பு, தெரு முனைகளில் சிலைகளை நிறுவுதல், தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்துப் புகைப்படம் எடுத்தல் போன்ற பழக்கங்கள் மற்ற நாடுகளில் இல்லை. அதனால்தான் ஒரு கட்சியின் தலைமை, தனது பிராந்தியத் தலைவரைக் கண்டிக்க அஞ்சுகிறது. கண்டிக்கும் பட்சத்தில் அவர் தலைமையை மிரட்டுகிறார். பின்னர் கட்சியை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்து விடுகிறார். தந்தை மகனுக்குள் கூட சிலசமயம் இவ்வாறு நேர்கிறது.  இது ஜனநாயக ரீதியில் ஒப்புக் கொள்ளக் கூடிய விசயம்தான் என்றாலும், ஊழல் செய்த அரசியல்வாதி கூட, தனது ஊழலைக் கண்டித்ததற்காக, இவ்வாறு செய்யும்போதுதான் வருத்தமாக உள்ளது.

வரையறை இல்லா அதிகாரம்:
      எந்த ஒரு அரசியல்வாதிக்குமே தங்களது மனதில் தாங்கள் ஒரு குறு நில மன்னர்கள் போன்ற எண்ணம் உண்டு. அதற்கான உதாரணங்களாகப் பல விசயங்களைச் சொல்லலாம். ஒருவரால் “நதிகளை இணைக்க முற்பட்டால் எனது மாநிலத்தில் ரத்த ஆறு ஓடும்” எனக் கூற முடிகிறது. ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து கொண்டு, பிரதமர் தலைவராக இருக்கும் ஒரு தீர்ப்பாயத்தின் உத்தரவையும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் அமல்படுத்த முடியாது,  என்று எதிர்க்க முடிகிறது.
        ஒரு மத்திய அமைச்சரால், மக்களுக்காகப் போராடும் ஒருவரை “ உன்னால் எனது தொகுதிக்கு வந்து விட்டு, திரும்பிச் சென்று விட முடியுமா?” என்று கேட்க முடிகிறது. இவற்றையெல்லாம் விட மிக மோசமாக ஒரு சிறியத் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் அவரது அடிப்பொடிகள் சேர்ந்து பிழைப்புத் தேடி தங்களிடம் அடைக்கலமாக வந்த பதின்ம வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து, சற்றும் மனிதத் தன்மை இன்றிக் கொலை செய்ய முடிகிறது.  

          “வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொண்டப் பாடம் வரலாற்றிலிருந்து நாம் எதையுமேக் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்” என்று சொல்வார்கள். இவ்வாறான முறையற்ற நடைமுறைகள் நம்மிடம் இருப்பதால்தான், நமது நாட்டின் வளர்ச்சி மெதுவானதாக இருக்கிறது. சுதந்திரத்திற்கு முன்பிருந்த சமஸ்தான அரசுகள் போன்ற நிலையை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். முன்பு முகலாயர்கள், பின்னர் ஆங்கிலேயர்கள் அடுத்து யாருக்கு வரவேற்பு அளிக்க இருக்கிறோம்?
       திருமதி ஆங் சான் சூகி இந்தியா வந்த போது “ இந்தியர்கள் ஜனநாயகத்தின் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. ஜனநாயகம் மறுக்கப்படும் போதுதான் அதன் வேதனைப் புரியும்” என்றார். நமது அரசியல்வாதிகள் அதைப் படித்தார்களா? எனத் தெரியவில்லை.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :