மாவட்ட ஆட்சியர்களும் செம்மையான நிர்வாகமும்.



இந்திய ஆட்சிப் பணி என்பது, மத்தியத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வினை எழுதி, அதில் இந்திய அளவில் உயர் மதிப்பெண் பெறும் இளைஞர்களுக்கு வழங்கப் படும் பொறுப்பு. இந்தத் தேர்வில் வெற்றிப் பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல.  திட்டமிட்ட, தொடர்ந்த உழைப்பும், புத்திக்கூர்மையும் சற்று அதிகமாகவேத் தேவை.
ஒரு மாவட்டத்தின் மைய நிர்வாகி என்பவர் சிறந்த முடிவெடுக்கும் திறன் கொண்டவராகவும், அதிக சவால்களைச் சமாளிக்கும் திறன் கொண்டவராகவும் இருத்தல் அவசியம். எனவே இந்தப் பணி மரியாதை மிக்க ஒன்றாகக் கருதப் படுகிறது.

     இத்தகையச் சிறப்பு மிக்கப் பணியை, மிகக் கடுமையான உழைப்பின் மூலம் பெறுகிறவர்கள் அனைவரும், பாராட்டும்படியான நிர்வாகிகளாக இருப்பதில்லை. சிலர் ஊழல்வாதிகளாகவும், பலர் அரசியல் கட்சிகளின் கைப்பாவைகளாகவும், மாறிப் போகிறார்கள். எனவேத் தற்போது I.A.S அதிகாரிகளும் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியமாக்கப் பட்டுள்ளது.

எவ்வாறாக இருப்பினும், சில ஆட்சியர்கள், நேர்மையாகவும், தேசப்பற்று மிக்கவர்களாகவும் செயலாற்றுகிறார்கள். அத்தகைய வெகு சிலரைப் பற்றிய விசயங்களைப் பகிர்ந்துக் கொள்ளவே இந்த பதிவு.

    கடலூர் மாவட்டத்தில் கலெக்டராக ஒரு சீக்கியர் இருந்த போது, ஒரு புயல் காலத்தில் அவரது துரிதமான நடவடிக்கை, பல மக்களின் துயர் துடைத்தது. சில நாட்களில் அதேப் பகுதிக்கு முதல்வர் குறைக் கேட்க சென்ற போது, அந்த மக்கள், இவர் எங்களுக்கு கலெக்டர் இல்லை. கடவுள் என்று கூற, அதனை முதல்வர் அருகில் நின்றிருந்த அவரிடம், முதல்வரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினார்.

சத்துணவுப் பணியாளர்களாகத் தேர்வானவர்களின் பணிநியமன ஆணையை அந்தி மாலை நேரத்தில் அவர்களது வீட்டிற்கே நேரில் சென்று வழங்குமாரு உத்தரவிட்டார் ஒரு பெண் ஆட்சியர். ஆள் இல்லையெனில் கதவில் ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டது. ஆளும் கட்சியின் உள்ளூர்ப் பிரமுகர்கள், உள்ளூரில், தங்கள் கட்சி அபிமானிகளை இந்தப் பணிகளில் சேர்த்துவிட்டுப் பணம் பெறுவது வழக்கம். இதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு.

மாவட்ட நிர்வாகம் சம்பந்தமான ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தின்போது, ஒரு அலுவலரது கைப்பேசியில் இருந்து ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திரற்குப் பயன்படுத்தும் டப்பாங்குத்துப் பாடல் அலறியிருக்கிறது. அவரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டார் ஒரு ஆட்சியர்.

எங்களது மாவட்டத்தின் ஆட்சியர் முயற்சியால் அரசு அலுவலகங்களில், அதிகாரத் தொணியிலானப் பேச்சு, அலைக்கழிப்புப் போன்றவைக் குறைந்திருகிறது.   நேரடியான லஞ்சம் புழக்கமும் குறைந்திருக்கிறது. ஒருசமயம் எங்கோ நிகழ்ச்சிக்குச் சென்று விட்டு திரும்பும் வழியில் ஒரு சிறுமி மாடு மேய்ப்பதைப் பார்த்திருக்கிறார் ஆட்சியர். அந்த சிறுமியிடம் விசாரித்தவர், அந்த சிறுமி பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் என்பதை அறிந்து கொண்டு, அவரது பெற்றோரை நேரில் அழைத்து, அரசாங்கம் பள்ளிக் குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்தாமல் இருக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் வழங்கும் சலுகைகள் அனைத்தையும் விளக்கிக் கூறி, அவர் மேற்கொண்டுப் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டுமென்று உறுதியளிக்கச் செய்திருக்கிறார்.

வெறும் அறிவுறுத்தல்களோடு தன் கடமை முடிந்ததாக எண்ணுபவரல்ல அவர். சில சமயங்களில் மேனிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தானேச் சென்று, பாடம் நடத்தி, தான் நடத்தியவற்றில் இருந்துத் தேர்வும் நடத்தி, அதன் மூலம் அவர்களின் திறனைச் சோதிக்கிறார் என்பது நம்மை வியப்படைய வைக்கிறது.

ஒரு இசுலாமியரான ஆட்சியர், 18 வயது நிரம்பாத ஒரு இசுலாமியப் பெண்ணின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தியதும், அதனால் வருத்தமுற்ற இசுலாமியச் சமுதாயத்தவர்கள், தங்கள் மதக் கோட்பாடுகளில் தலையிடுகிறார் என்றுப் போர்க்கொடி உயர்த்தியதும்   நாளேடுகளில் பரபரப்பாக விவாதிக்கப் பட்ட ஒன்று.

மேலும் திரு இறையன்பு I.A.S, திரு. ராதாகிருஷ்ணன் I.A.S  போன்றவர்களின் நிர்வாகத் திறமை அனைவரும் அறிந்ததே. இதுபோன்றவர்களின் சேவை நமது நாட்டுக்கு அவசியம் தேவை. தங்களது தன்னலமில்லாச் சேவையுணர்வின் மூலம் நமது வாழ்த்துக்களுக்கு உரித்தாகிறார்கள் நமது ஆட்சியர்கள். 

Comments

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு நன்றி
    வலைச்சரத்தின் மூலம் தொடர்கிறேன்

    ReplyDelete
  3. பூவிழி, திண்டுக்கல் தனபாலன் .., நன்றி. எனது வலைப்பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி.

    எனது பதிவுகளைப் பிந்தொடர்வதற்கும் கூடுதல் நன்றி.!!


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :