அரசுத் துறைகள்.


 அரசு அலுவலர்களுக்கு என்று சற்று அதிக மரியாதை உண்டு சமூகத்தில். அந்த வீடு பேங்க் காரர் வீடு, இது சர்வேயர் வீடு, இது செகரட்டரி வீடு என்பார்கள் ஊர்ப் புறங்களில். சில வருடங்களுக்கு முன்பு வரை, அவர்களுக்கு வருமானமும் மற்றவர்களுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு அதிகம் என்பதால் சற்று அதிகாரம் தூள் பறக்கும்.
 அதனால் வேலை செய்யும் இடங்களிலும், அவர்களாகப் பார்த்து வேலை செய்தால்தான் உண்டு என்ற நிலைமை உண்டு. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார்கள். காவல் துறையில் பணம் தந்தால் வேலை எளிதில் நடக்கும். சட்டம் எல்லாம் முடமாக்கப் படும்.
சமீபத்தில் ஒரு பெண் அலுவலர், பாரத் ஸ்டேட் வங்கியின் பரபரப்பான பணி நேரத்தில் கணினியில் சீட்டு விளையாடும் புகைப்படம் முகனூலில் பிரபலமாக இருந்தது. அவ்வாறான மன நிலையில்தான் பல அதிகாரிகளும் இருப்பார்கள்.
வட்டாட்சியர் அலுவலகங்களில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்.., லஞ்சம் வாங்குவதும் இல்லை, கேட்பதும் இல்லை என்று மூலைக்கு மூலை எழுதி இருப்பார்கள். ஆனால் கொடி நாள் பணம் என்று அனைவரிடமும் வசூலிப்பார்கள் ஆனால் ரசீது தர மாட்டார்கள்.  சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு பத்திரப் பதிவிற்கு 2000 ரூ பத்திரத்தினுள் வைக்க வேண்டும். (நாம் வாங்கும் சொத்தின் மதிப்பை பொறுத்து). அப்படியென்றால் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று கணக்கிட்டால் தலை சுற்றும்.
புதிய கடவுச் சீட்டு (passport) பெறுவதற்காக, நமது எல்லைக் காவல் நிலைய ஒப்புதல் பெற, 200 ரூ ஆக இருந்த லஞ்சம் தற்போது ரூ500 ஆக உயர்ந்திருக்கிறது. சில நேரங்களில் லஞ்சமும் தந்து, காவல் நிலையத்தில் ஒரு மணி நேரம் அரிசிப் பை (ration) நிரப்பித் தரும் உத்தியோகமும் பார்த்து வர வேண்டும்.
  ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்துபவர்கள், R.T.O ன் வீடுகளுக்கு சென்று, விவசாய வேலைகளில் உதவி செய்து விட்டு வருவதும் உண்டு. வட மாநிலம் ஒன்றில் 1000 ரூ மற்றும் புகைப்படம் தந்தால் ஓட்டுனர் உரிம்ம் உங்களைத் தேடி வரும்.
அரசு சார்ந்த, உற்பத்தித் துறைகளில், பணியாற்றுபவர்கள்.., வேலை செய்வது தவிர்க்கவே முடியாத விசயங்களை முடிக்க மட்டும் தான். பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவார்களா என்றால், மிகவும் குறைவு. அதிகப் படியானத் தன்னம்பிக்கை, தன்னை வேலையை விட்டு நீக்க முடியாது என்கிற எண்ணம் போன்றவை, அவர்களின் வேலையின் தரத்தைக் குறைத்து விடுகின்றன. தனது பணியை கடமை என்றுக் கருதாமல், கவுரவமாக மட்டுமே எண்ணுவது உண்டு.
  Professional ethics  தவிர அனைத்து விதமான சட்ட நுணுக்கங்களையும் தெரிந்து வைத்து இருப்பார்கள். சிலரோ வேலையிடத்தில் தான் பெரியவன் என்று சமுதாயத்தில் விளம்பரம் செய்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தவன் என்று வேலையிடத்தில் டம்பம் அடிப்பார்கள். இரண்டு புறமும், ஆதாயம் அடைவார்கள்.
 இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் அவர்கள் வேலைக்குச் சேரும் போது, பணம் கொடுத்துச் சேர்வதுதான். மின்சார வாரியத்தில், 20000 சம்பளம் பெறக் கூடிய வேலையைப் பெற 3 லட்சம் தர வேண்டும். மற்றொருத் துறையில், 40000 சம்பளத்துக்கான வேலைக்கு கமிசன் 5 லட்சம். சத்துணவுப் பணியாளர் வேலைக்குக் கூட 2 லட்சம் வரையில் தர வேண்டும்.
  எனக்கு ஒரு சமயம், எனது வாக்காளர் அடையாள அட்டையின் முகவரியில் பக்கத்துத் தெருவின் பெயர், தவறாக அச்சிடப் பட்டு இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, அனைவரையும் அடையாள அட்டை சரிபார்க்கும் பணிக்கு ஒத்துழைக்குமாறும், ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளுமாறும் அறிவிப்பு வந்தது. வட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். துணை வட்டாட்சியர் ஏன் இவ்வளவு நாட்கள் மாற்ற வில்லை? என்றார், நான் வெளி நாட்டில் இருந்தேன் அதனால் முடிய வில்லை என்றேன். “உன்னை எல்லாம் யார் வெளி நாட்டில் இருந்து திரும்பி வரச் சொன்னது? நீ எல்லாம் ஓட்டுப் போடலைன்னு இப்போ யார் அழுதார்?” என்றார்.

  வெளி நாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு அன்னியச் செலாவணி ஈட்டித் தருகிறோம் தெரியுமா? வெளிநாடு என்றால் அவ்வளவு இளப்பமா? நாங்கள் இல்லையென்றால் இந்தியப் பொருளாதரம் என்ன ஆகும் தெரியுமா?.. எனக் கேட்க வேண்டும் எனக் கோபம். அவரிடம் வாக்குவாதம் செய்ய விருப்பம் இல்லை. உண்மையில் அந்தப் பிழையினால் எனக்குச் சிறிது நன்மைதான். ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின் போதும், இரண்டு வார்டு வேட்பாளர்களிடம் இருந்து எனக்கு தின்பண்டம் கிடைக்கிறது. (துரதிருஷ்டவசமாகப் பணம் தரும் அளவு எங்கள் பகுதி வேட்பாளர்கள் இன்னும் முன்னேறவில்லை). தவிர எனக்கு அடையாள அட்டையாக அதிகம் பயன்படுவது எனது ஓட்டுனர் உரிமம் தான். அதனால் மிகவும் பவ்வியமாக “ரொம்ப நன்றி சார்” என்று சொல்லி விட்டு, அட்டையைப் பெற்றுக் கொண்டு வெளியேறினேன்.

  திரு கி.ரா அவர்கள் தனக்கு மின்சார வாரியத்தில் கிடைத்த அனுபவங்களை நகைச் சுவையாக ஒரு சிறு கதையில் எழுதி இருப்பார். அந்த நிலை இன்றும் உண்டு.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :