சில சம்பவங்கள்...


ஒரு முறை, சென்னையின் மின்சார ரயில் நிலையம் ஒன்றில் கண்ட சம்பவம். 35 வயதை ஒத்த ஒருவரது கண்ணிற்கு சற்று மேலேத் தோல் கிழிந்திருக்கிறது. படிகளில் எல்லாம் ரத்தம் சிந்திக் கொண்டு, ரத்தம் தோய்ந்தக் கைக்குட்டையினால் காயத்தை மறைத்தவாறு அங்கு இருக்கும் அனைவரிடமும் அவர் உதவி கேட்கிறார். தன்னை ஒருவன் முகத்தில் குத்திவிட்டு தனது கைப் பேசியைப் பிடுங்கிச் சென்று விட்டதாகவும், தனக்கு எதாவது உதவி செய்யுமாறும் கெஞ்சுகிறார். யாருமே அதை பொருட்படுத்தவில்லை. போய் ரயில்வேப் போலீசில் சொல்லு என்கிறார்கள். தங்களது உரையாடலைத் தொடர்கிறார்கள்.
   அவர் சற்று மனம் தளர்ந்தவராக, சுரங்கப் பாதையின் மேலும் கீழுமாக நடந்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார். அனைவரும் அவரது முகத்தின் ரத்தத்தைப் பார்த்து பயந்து, ஒதுங்கிச் செல்கிறார்கள். நல்ல வேளையாக அங்கு ஒரு கல்லூரி மாணவர் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற மனம் வந்து அவரை அழைத்துச் சென்றார். நான் சற்று பயந்திருந்தாலும், உடன் செல்வோமே என்ற எண்ணத்தில் உடன் சென்றேன்.
அருகில் ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கு முதலுதவிப் பெட்டி இருக்கும் என்கிற எண்ணத்தில் அங்கு அழைத்துச் சென்றோம். அவரது ரத்த இழப்பை நிறுத்தினால், அவருக்கு மருத்துவமனைக்கு செல்வது எளிது. இவ்வளவு ரத்தம் சிந்திக் கொண்டு இருக்கும் நபரை, எந்த வாகனத்திலும் ஏற்றுவது கடினம். ஆனால் அந்த கட்டுமானப் பணியின் மேற்பார்வையாளர், உள்ளேயே விட வில்லை. தனது நிறுவனத்தில் விபத்து நேர்ந்ததாகப் பழி வரும் என்று பயந்தார். அருகில் ஒரு காவல் நிலையம் இருக்கிறது, அங்கு செல்லுங்கள் என்றார். காவல் துறையில் புகார் தெரிவிக்காமல் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க மாட்டார்கள் என்றனர்.
  பின்னர் அரை மனதுடன் காவல் நிலையம் சென்றோம். அவருக்கு முதலுதவி செய்ய உதவி செய்யுமாறுக் கேட்டுக் கொண்டோம். அங்கு இருந்த ஒரு அனுபவசாலிக் காவலர், இதனை ரயில்வே காவல் மட்டும்தான் விசாரிக்கும். நீங்கள் செல்லுங்கள் என்றார். ஆனால் ஒரு இளைய வயதுக் காவலர், தனது உயரதிகாரியிடம் தகவல் சொல்லி விட்டு உடனே ஒரு ரோந்து வாகனத்தை கொண்டு வந்தார். அப்பாடா.., ஒரு சில நல்லவர்களாவது இருக்கிறார்களே என்றுத் தோன்றியது. “இவரை உங்களுக்குத் தெரியுமா எப்படிப் பழக்கம்?” என்றார்.., “இல்லை சார். நாங்கள் ரயில் பயணிகள், உதவி செய்ய வந்தோம்” என்றோம். சரி நீங்கள் கிளம்புங்கள். நான் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறேன் என்றார்.
    அவரை அப்படியே ரயில்வே சுரங்கப் பாதையில் விட்டிருந்தால், மயக்கம் அடைந்திருக்க வாய்ப்பு உண்டு. அதன் பின்னர் அவரது உயிருக்கு ஆபத்தாகவும் முடிந்திருக்கலாம். அந்த சம்பவம் நமக்கு கூட இன்னொரு நாள் நிகழலாம். நாமும் இவ்வாறு அல்லல் பட நேரலாம். யாருக்குத் தெரியும்?
 இக்கட்டானத் தருணத்தில் ஒருவருக்கு உதவி செய்ய முடிந்ததே என்று மனத்திருப்தி.
விமானப் பயணம்.  
ஒரு முறை, அரபு நாடு ஒன்றில் இருந்து விடுமுறையில் வரும் போது, விமானத்தில் பணிப் பெண் ஒருவர்(இந்திய நிறுவனம், இந்தியப் பெண்) குளிர் பானங்கள் வழங்கிக் கொண்டு வந்தார். முன்னிருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் (தமிழன் தான்), அந்தப் பெண்ணைத் தனதுக் கைப் பேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தான். கைப் பேசியை சாதாரணமானக் கோணத்தில் வைத்துக் கொண்டு, அந்தப் பெண்ணுக்குத் தெரியாதவாறு. ஆனால் அந்தப் பெண்ணோ, எளிதில் அதனைக் கண்டு கொண்டார். சட்டென்று, அவனைப் பார்த்து, “என்ன செய்கிறாய்? படம் எடுக்கிறாயா? நான் உன்னை இறங்கியவுடன், பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பேன்” என்றுக் கோபமாகக் கேட்டார்.
  சட்டென்று சுதாரித்த அவன், பட படவென்று எல்லாப் படங்களையும் அழித்தான். ஆயினும் அந்த பெண், தனது தோழியிடம் சொல்லி, அந்த செல் போனை வாங்கிக் கொண்டார். (ஆபாசம் இல்லையென்றாலும், அந்தப் படங்களை, வெட்டி, வேறுப் படங்களுடன் இணைத்து பல தில்லு முல்லுக்கள் செய்து விட முடியும்). அதில் தனது படம் ஏதேனும் மீதம் உண்டா எனப் பார்த்து விட்டு, இறங்கும் வரைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டார். புகார் தெரிவித்தாரா? எனத் தெரிய வில்லை.

மேற்கத்திய முறையிலான உடை மற்றும் தொழில் என்றாலும், இது போன்ற விசயங்களில் கண்டிப்புடன், தைரியமாக நடந்து கொண்ட அந்தப் பெண்ணை பாராட்டத் தோன்றியது.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :