சாதியம்.


   கிராமங்களில் சாதிப் பாகுபாடு அதிகம் உண்டு. நான் பார்த்த, கேள்விப்பட்ட சில சம்பவங்கள் என்னை மிகவும் வருத்தப் பட வைத்தன.
அவற்றுள் ஒன்று, காதல் தோல்வியால் ஏற்பட்ட நண்பர் ஒருவரின் தற்கொலை. எனக்கு 3 வயது மூத்தவர் அவர். அவர் “அண்ணன்” பள்ளியில் மேனிலை கல்விப் படிக்கும் போதேக் காதலித்தார் (சுமார் பதினைந்து ஆண்டுகள் முன்பு). சிறு வயது என்பதால் விபரீதம் புரியவில்லை. மிகத் தீவிரமானக் காதல். சற்று உணர்ச்சி வசப் படும் குணம்.
தனது வலது கரத்தின், மேல் பகுதியில் (அரைக் கை சட்டையின் மறைவில்) ஒரு தாலிக் கயிறினைக் கட்டி வைத்திருப்பார். தனது காதலிக்காக அதனைப் பத்திரமாக பாதுகாத்து வந்தார். அந்தத் தாலி முடிச்சு இளகும் போதெல்லாம் அதனை இறுக்கி விட வேண்டும் எனில் என்னைத் தேடி வருவார். அவரது காதலியின்  பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் மனைவி என்றேக் கூறுவார். இருவருமே தாழ்த்தப் பட்டவர்களாகக் “கருதப்படும்” வகுப்பினைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால் கொடுமை என்னவென்றால், அதில் ஒன்று சற்று உயர்ந்த “தாழ்ந்த சாதி”யாம், மற்றொன்று; அவர்களுக்குக் கீழான தாழ்ந்த சாதியாம். மேலோட்டமாகப் பார்த்தால் தெரிய வராத இந்த குரூரம், கவனித்துப் பார்த்தால்தான் தெரிய வரும். சில கிராமங்களில், இந்த சாதிகளுக்குள் பல முறை மோதல் சம்பவங்களும் நேர்ந்ததுண்டு.
  உயர்ந்த சாதியானப் பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு. வருத்தமடைந்த இருவரும் விசம் அருந்தி விட்டார்கள். வகுப்புத் தோழர்கள் செய்தி அறிந்து மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள். ஆனால் அவரோ இரண்டு வேளை உணவு உண்ணாமல் விசம் குடித்ததால், மரணம் அடைந்தார். விசம் குடிக்கும் முன்பு காலையில்,  அவர் தந்து விட்டுப் போன Hero பேனாவின் காரணமும், அதில் இருந்த பாசமும் சில வாரங்கள் கழித்துதான் எனக்கு உரைத்தது. காலை சற்று உந்தியவாறு, எக்கி, பிண அறையில் உடலை மட்டுமேக் காண முடிந்தது. அருகில் செல்ல முடியாதக் கூட்டம். பள்ளி மாணவர்கள் அனைவரும் அங்குதான் இருந்தனர்.
   மற்றொன்று, எனது கிராமத்தில் சமீபத்தில் நடந்தது..,
சில வருடங்களுக்கு முன்பு, ஒரு அரசுப் பள்ளி எழுத்தர் எங்களது ஊருக்கு மாற்றலாகி வந்திருந்தார். எங்களது ஊர் பிடித்து விட்டதால், ஓய்வுக்குப் பிறகும் அங்கேயேத் தங்கி விட்டார். பத்து வருடங்களுக்கும் மேலாக வசித்தபடியால் ஊரில் அனைவரிடமும் நல்ல பழக்கம். அவர் சாதியினை யாரும் ஒரு பொருட்டாகக் கருத வில்லை. சொந்தமாக வீடு கட்டி குடியேறிய அவருக்கு, உடல் நலம் குன்றி, இறந்த பின் வந்தது சாதி பிரச்சினை. இறுதிச் சடங்கு மேல் சாதி சுடுகாட்டிலோ அல்லது கீழ் சாதி சுடுகாட்டிலோ செய்ய முடியாது என்று மறுப்புத் தெரிவித்தார்கள். (ஏன் எனில் தாழ்ந்த சாதியிலேயே, தாழ்ந்த சாதியாம்)
  அவருக்கு உறவினர்கள் என்று அதிகம் இல்லை என்பதால், அவரது மகனின் பள்ளித் தோழர்கள், தோழர்களின் பெற்றோர்.., மற்றும் அவர் வசித்த (மேல் சாதி என கூறப் படுகிற) தெருவினர் அனைவரும் இணைந்து நின்று இறுதிக் காரியங்களைச் செய்தார்கள். உள்ளூர் நாவிதரோ, “தப்பு” கொட்டுபவர்களோ இல்லாமல், வெளியூர்க் காரர்கள் வரவழைக்கப்பட்டு, இறுதிச் சடங்கு நடந்தது.
 ஆனால், சுடுகாடு மட்டும் திட்டவட்டமாக மறுக்கப் படவே, சுடுகாட்டின் அருகில், நெடுஞ்சாலை ஒன்றின் பாலத்தின் கீழ் தனியாகப் புதைக்கப் பட்டது அந்தப் பெரியவரின் உடல். என்னை விட வயதில் சற்று இளையவர்களாக இருந்தாலும், உறுதுணை யாருமில்லாத, தனது நண்பனின் தந்தையின் இறுதிச் சடங்கை முன்னின்று கவனித்து, வாதிட்டு, போராடி நல்ல விதமாக முடித்த தம்பிகளுக்கும், நண்பர்களுக்கும்.., வாழ்த்துக்களைச் சொன்னேன். நம்மால் செய்ய முடியாத நல்ல காரியத்தைச் செய்தவர்கள் இளையவர்கள் எனினும், பெரியவர்கள் தானே..!!
  பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்களைப் பார்த்தால் (கல்லூரிகள்), இன்ன சாதியினர் என்றால் (நிறுவனரின் சொந்தப் பிரிவினர்)  கல்விக் கட்டணம் குறைவு, சேர்க்கையில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை.. போன்ற விசயங்கள் உண்டு. அரசியல் கட்சிகளிலும் உண்டு. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில்  தமிழகத்தில் சாதியம் குறைவு. தந்தைப் பெரியாரின் தாக்கம் காரணமாக, யாரும் பெயரின் பின்னால் சாதியைச் சேர்ப்பது இல்லை. வட இந்தியாவில் அனைவரின் பெயரும் ஒரு சாதியுடன்தான் முடியும். ஏற்றத்தாழ்வுகளும், கவுரவக் கொலைகளும் மிக மிக அதிகம்.
  இன்னமும் உலகம் இருட்டறையில்தான் உள்ளது.   



Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :