தங்கமனசுக்காரர்கள் (The Golden Hearts) ..!!!?


 வரதட்சிணை :

     தனது மகளை, மறு வீடு அனுப்புகிறோமே.., அவள் அங்கு மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நமது முன்னோர்களால் மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்பளிப்பாக பணம் தரும் பழக்கம் துவங்கியிருக்க வேண்டும்.

அந்த நல்ல விசயம் பின்பு, மருவி.., இது கட்டாயம், தமது குடும்ப கவுரவம்.., என்றாகித் தற்போது வரதட்சிணைக் கொடுமையால் இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் மரணம் அடைகிறார் என்று புள்ளி விபரம் தெரிவிக்கிறது. நான் கிராமத்தவன் என்கிறபடியால், பல்வேறு விசித்திரமானக் கொடுமைகளைக் கண்டதுண்டு.
பதினைந்து வருடங்களுக்கு முன்னர், 5-10 பவுன் என்பது ஒரு மத்திய தர விவசாயக் குடும்பத்தில் சராசரியான வரதட்சிணை. அதுப் பின்னர், 15 ஆக உயர்ந்து, 30 சவரன் ஆக மாறி விட்டது. இன்றைக்கு இருக்கும் தங்கத்தின் விலையில், இவ்வளவு சவரன் நகை வாங்குவது எல்லாம் கனவில்தான் முடியும்.




   ஆனால் இவ்வளவு நகை தந்துப் பணம் தந்து, ஒருப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்தால், அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட முடியுமா? என்றால் இல்லை. பின்னர் மாப்பிள்ளை வீட்டாருக்கு எப்போதெல்லாம் பணம் தேவையோ அப்போதெல்லாம் அவர்கள் கை உயரும். மனச் சிதைவுகள், வேறு விதமானத் தொந்தரவுகள்... இன்னும் ஏராளம்.  தன்னை நம்பித், தன்னுடைய வீட்டை விட்டு வந்த ஒருப் பெண்ணை அடிப்பவன் எல்லாம் ஒரு கீழான விலங்கு என்றே சொல்லலாம். ஆனால் நமது சராசரி சமுதாயம் இதுதான்.
   
    நகரங்களில் இன்னும் மோசம். பல கொலைகள் நடந்தேறுகின்றன. பலப் பெண்கள் தற்கொலைக்கு தூண்டப் படுகிறார்கள். இதற்கு முக்கியமானக் காரணமாக, நிச்சயமாக ஒரு பெண்மணி இருப்பார். மாமியார் அல்லது நாத்தனார், அல்லது கணவனின் “சேர்ந்த மனைவி”.. (கணவன் தவிர்த்து குடும்பத்தில் உள்ளப் பிற ஆண்களின் பங்கு குறைவு).
பணமும் அதிகாரமும் நம்மிடம் இருக்கும் பட்சத்தில், நாம் இந்தியாவில் எந்தக் குற்றமும் செய்யலாம். அதிலிருந்து எளிதாகத் தப்பித்து விடலாம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதுதான் உண்மை. ஒரே ஒரு விசயம், நாம் செய்யும் குற்றம் நாடு முழுவதும் தெரியும் அளவுக்கு விளம்பரம் ஆகி விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு, நமக்கு செல்வாக்கு வேண்டும். அல்லது புத்திசாலித்தனம்?! வேண்டும்.
 
 யாருமேப் பெண் தர மறுத்த நிலையில், காதலித்துத் திருமணம் செய்து கொண்டு கெஞ்சிக் கூத்தாடி, மனதை வசியம் செய்து..(பில்லி,சூனியம்) அழைத்துச் சென்று விட்டு, இரண்டே மாதங்களில், பெண்ணை பிறந்த வீட்டிற்கு அனுப்பி சீதனம் செய்ய(வரதட்சிணை) அனுப்பும் தங்க மனசுக் கணவர்கள் நம்மில் உண்டு.
   

     மைத்துனன் நல்ல வேலையில் இருந்தால், அதிக வரதட்சிணைக் கிடைக்கும் என்ற நப்பாசைக்காரர்கள் இங்கு உண்டு. தற்போது நண்பர்கள் வட்டத்தில் பார்க்கும்போது, சகோதரி இருக்கிறவர்கள் எல்லாம், எதேனும் ஒரு விதமானத் தொல்லையில்தான் உள்ளார்கள். 
நண்பரின் சகோதரி ஒருவர், காதலித்து சிறு வயதிலேயே, வேறு சமுதாயத்தவரை.., வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்தவர். ஆனால் நாளடைவில் பழக்கம் மாறி, தனது கணவன் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் தானே அவருக்குப் போதை ஊசிப் போட்டு விடும் அவல நிலை அவருக்கு. அடிக்கடிப் பணம் கேட்டு நண்பரிடம் வந்து விடுவார். அப்படிப் பணிவாக இருந்தாலும் அடி, உதை.., சித்திரவதை.. இன்னும் ஏராளம்.

  இரண்டாம் திருமணம் வேண்டி(நிறைய நகை, பணம் பெற), 3 வயதுக் குழந்தையைத் தண்ணீர்த் தொட்டியில் அழுத்தி கொன்றார்கள் என்று ஒருப் பெண் சொல்லும் போது கேட்கவே வருத்தமாக இருந்தது. அந்தப் பெண்ணோ, நல்ல வேளை இன்னொருக் குழந்தைக் கைப்பிள்ளை அதனால், நானே வைத்திருந்தேன் பிழைத்தது என்றார்.

  பெற்றோரைக் காண வந்த, பெண்ணையும், பேரப் பிள்ளையையும் காண வில்லை என்று, கிராமம் முழுவதும் தேடி இருக்கிறார்கள். கிடைக்க வில்லை. அதன் பின்னர், கனத்த மனதுடன், கிணறுகளில், வயல் வரப்புகளில் தேடியபோது, ஒரு கிணற்றில், ஒரு பெண் செருப்பு, மற்றும் ஒரு குழந்தையின் செருப்பு மிதந்திருக்கிறது. “அந்த அப்பன்காரன் தலையில அடிச்சுக் கிட்டு அழுதான் பாரு, இன்னமும் அழுகை வருதுக் கண்ணு, வேதாளம் வந்து, தண்ணிய மொத்தமும் வெளியேற்றி, அப்புறம்தான் பிரேதத்தை எடுக்க முடிஞ்சது. ஆனா அந்த மாப்பிள்ளைக் காரனுக்கு, சட்டுனு இன்னொரு எடத்திலப் பொண்ணுப் பார்த்து கட்டி வச்சிட்டாங்க.., நல்லாதான் வாழுது நாயி.. அதில ரெண்டுப் புள்ளைங்க.. என்னாக் கடவுளு, சாமியோப் போ” என்றார் ஒருப் பாட்டி.


  இன்னொருப் பெண்ணின் கதையைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது. மாப்பிள்ளை? BHEL ல் வேலை. நிறைய சம்பளம். பக்கத்து வீட்டு பெண்ணைக் காதலித்து, வீட்டை விட்டு சென்று இருக்கிறார். ஆனால், இதனை மறைத்து இந்தப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.  இவர்களுக்கு ஒரு குழந்தைப் பிறந்த பின்பும் அவர் தனது முதல் காதலி? உடன் தொடர்பாகவே இருந்து கொண்டு சித்திரவதை செய்து இருக்கிறார்.
அதாவது அவரது நோக்கம், இந்தப் பெண் தானாகவே கணவனைப் பிடிக்க வில்லை என்று சொல்லி விட்டுச் செல்ல வேண்டும். தான் தனது காதலியுடன் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்பதுதான். அவ்வளவு தெய்வீக்க் காதல் கொண்டவர், குறைந்த பட்சமாக இந்தப் பெண்ணுடன் ஆரம்பத்தில் இருந்தே வாழாமல் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அந்தத் தங்க மனசுக்காரர், சற்றேனும் நல்லவர் என்றால், தனது மனைவியிடம் பெற்ற வரதட்சிணையை மட்டுமேனும் திருப்பித் தந்திருக்கலாமே?. அந்தப் பெண்ணிற்கோ பயம். தன்னைப் பார்த்துக் கொள்ள ஆளில்லை. கைக்குழந்தை வேறு. கடையில் வேலை செய்துதான் சாப்பிடுகிறேன் என்ன செய்வேனோ? என்றார்.  இந்துத் திருமணச் சட்டத்தின் படி, கணவன் அல்லது மனைவி தனது திருமண பந்தம் அல்லாத மற்ற நபருடன் தொடர்பு கொள்கிறார் என்கிற பட்சத்தில் மண விலக்குக் கோரலாம். ஜீவனாம்சம் கேட்கலாம். ஆனால் பல இடங்களில், காரணத்தை நிரூபிக்க முடியாது. உங்களிடம் ஆதாரம் ஏதும் இருக்கும் எனில் நீதிமன்றத்தை அனுகுங்கள். ஆனால் நிறைய அலைய வேண்டும் என்றேன்.

Comments

  1. இந்தப் பதிவில் இருப்பதைபோன்ற எழுத்தின் அளவை மற்ற பதிவுகளுக்கும் பயன்படுத்தவும் . வாசிப்பதற்கு வசதியாக உள்ளது . போலவே பத்தி பிரிப்பதும் ..

    ReplyDelete
  2. நிச்சயமாக.., தங்கள் ஆலோசனையைப் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :