வானம் வழங்குமெனில்..!!

  சில பேச்சாளர்களுக்கு, பலரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு, அவர்களால் தங்களதுப் பேச்சின் மூலம் பல சமுதாய மாற்றத்தை உண்டு செய்ய முடியும். சிலருக்கு பேசியே பலரை ஏமாற்றும் திறமை உண்டு. மனிதர்கள் சூழ்நிலை மற்றும் தேவைக்கு ஏற்பத் தங்கள் குணங்களை மாற்றிக் கொள்ளும் தன்மைக் கொண்டவர்கள்.  ஒருவரின் பேச்சை வைத்து நல்லவர், தீயவர் என முடிவெடுப்பது கடினம்.

   ஒரு சமயம், பக்கத்து வயலைச் சேர்ந்த ஒரு பெரியவருடன் சேர்ந்து மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்ட்த்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தோம். அங்கு எங்களது வயலுக்கு நீர்ப் பாசனம் தரும் ஏரியின் மதகு புதுப்பிக்கும் பணியை விரைவாக முடிக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றைத் தருவதாக ஏற்பாடு. அந்தப் பணியை குத்தகை எடுத்தவர் ஒரு விவசாயி. பல சங்கத்துப் பிரதிநிதிகளும் பலக் குறைகளை ஆட்சியரிடம் முன் வைத்தார்கள். ஆட்சியரும் கவனமாகக் கேட்டுக் கொண்டு, நிவாரணங்களை கூறிக் கொண்டிருந்தார்.
  எங்களது ஏரியின் மதகுப் புதுப்பிக்கும் பணியைக் குத்தகை எடுத்திருந்த குத்தகைதாரரும், ஒருப் பிரதிநிதியாக விவசாயிகளின் பல்வேறு இன்னல்களைப் பற்றிப் பேசி, அவற்றை களைய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அவரதுப் பேச்சைக் கெட்கும்போது விவசாயிகள் மீது மிகவும் அக்கறைக் கொண்டவர் போல் தெரிந்தது.

    ஆனால், எங்களது ஏரியின் கல் மதகினை, சிமென்ட் மதகாக மாற்ற அவர் பெற்றிருந்த ஒப்பந்தத்தை (பாதி வேலையை முடித்து விட்டு) 10 மாதங்களாகக் கிடப்பில் போட்டு விட்டு, அந்தப் பணத்தை தனது வருமானத்தைப் பெருக்குவதற்காக, செலவிட்டுக் கொண்டிருப்பவர் அவர். ஆனால், அந்த மாதங்களில் பெய்ய வேண்டியப் பருவ மழைத் தவறாமல் பெய்திருந்தால்.., அந்த மதகினைச் சுற்றி அணையப் படாமல் விட்டிருந்த ஏரிக் கரை பெரிதாக உடைப்பெடுத்து, பல நூறு ஏக்கர் நிலங்கள், அழிந்து, மண்ணால் தாறுமாறாக நிரப்பப் பட்டு அழிவை ஏற்படுத்தி இருக்கும்.

  மேலும், ஏரியில் நீர் தேங்காமல், அடுத்த வருடமும் விளைச்சல் இருந்திருக்காது. ஆனால் மழை பெய்யாமல் ஏமாற்றியதால் அருகில் இருந்த வயல்கள் பிழைத்தன. இதன் ஆபத்தை உணர்ந்து, நாங்கள் பல முறைப் பொதுப்பணித் துறை அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும், பலனில்லை. பின்னர் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தோம். முதுகலை விவசாயம் படித்து பணிக்கு வந்திருந்த அவரும் ஏனோ சரியான நடவடிக்கை எடுக்க வில்லை. அதன் பிறகு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்து, குறைதீர் நாள் கூட்டத்திற்குச் சென்றோம்.

  நாங்கள் மனுதர இருந்ததை தெரிந்து கொண்ட அந்தக் குத்தகைதாரர், எங்கள் பின்னாலேயே வந்து, கூட்ட அரங்கத்திலேயே ரகசியமாகச் சமாளிப்பு விளக்கம் தர ஆரம்பித்தார். மனுவைத் தர வேண்டாம் என்றும்.. தான் இன்னும் 10 நாட்களில் பணியை முடித்து விடுவதாகவும் கூறினார். அவரது செயல்பாடுப் பற்றி எங்களுக்குத் தெரியும் என்பதால் அதனைப் பொருட்படுத்தாமல் மனுவைத் தந்து விட்டு வந்தோம். ஆனால் ஏரியைத் தூர் வாரும் பணிக்கு சென்றிருந்த ஊர் மக்கள், அள்ளிய மண்ணை இந்த மதகினைச் சுற்றிக் கொட்டி, அவர்களாகவே கரையைச் சரி செய்திருந்தார்கள். மதகின் கதவு (shutter) சில வாரங்களில் பொருத்தப் பட்டது. யாரிடம் வழங்கிய மனு வேலை செய்தது என்றுத் தெரிய வில்லை.

  அதன் பிறகுத் தற்போதுதான் மழைப் பொழிகிறது. இறைவன் அருளால் ஏரிகளில் நீர் நிறைந்தால், இந்த வருடம் ஏரிகளையும் கிணறுகளையும் மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் எங்களது மாவட்டம் சற்று மகிழ்ச்சி அடையும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :