மாமன்னன் கரிகாலச் சோழன் ( ஒரு புத்தக விமர்சனம்).

   
          மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது தளத்தில் ஒருப் பதிவு...(நாங்களும் எழுத்தாளர்தாமுலே..!!)

டாக்டர். நிரஞ்சனா தேவி என்பவரது எழுத்தில், விகடன் பிரசுரம் மூலம் வெளி வந்திருக்கிற கரிகால்  சோழன் என்கிறப் புத்தகத்தைப் படித்த போது எழுந்த எண்ணங்கள் எழுதத் தோன்றியது.




தமிழ் மன்னர்களில் மாமன்னர் யார்? 

     
        வரலாற்றை சிறிதளவேப் படித்திருந்த எனக்கு, மாமன்னன் ராசேந்திரச் சோழன் தான் வலிமை மிகு மன்னன் என்கிற எண்ணம் இருந்தது. ஆனால் இந்தப் புத்தகம் படித்தபின், கரிகாலனே சிறந்தவர் என்கிற எண்ணம் மேலோங்குகிறது. கங்கை வரை வென்றவர் பெரியவரா? இல்லை, இமயம் வரை வென்றவர் பெரியவரா? என்கிற கேள்வியின் விளைவு. 

     
         இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் என மொத்தம் மூன்றுத் தமிழ் மன்னர்கள் இமயம் வரை வென்று வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறார்கள். வரலாற்றுக்கு முந்தையக் காலங்களில் இன்னும் எத்தனைச் சிறந்த மன்னர்கள் இருந்தார்களோ, எப்படியெல்லாம் சிறப்பாகத் தமிழ் மக்களை காத்தார்களோ??!! என வியப்பு மேலிடுகிறது.


உறையூர் மற்றும் காவிரிப்பூம்பட்டினம்  

            
            உறையூர்   கோழியூர் என அழைக்கப் பட்ட  வரலாறு, சில அகழ்வாய்வுகளில் கிடைத்த சிதைவுகள், கடலுக்கு அடியில் கண்டெடுத்த கட்டுமானங்கள் போன்றவற்றால் 17000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சிறப்பான, வளர்ந்த.., நகரமாக இருந்திருக்க வேண்டும் என்று  கருதப் படுகிற காவிரிப் பூம்பட்டினம் (பூம்புகார்) என தகவல்கள், தமிழராகப் பிறந்தவர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளுமாறுப் பல புதிய செய்திகளைச் சொல்லுகிறது இந்தப் புத்தகம். 

          
            சாத்தான் என்று அழைக்கப் பட்ட   அய்யனார் வழங்கிய செண்டாயுதம் கொண்டு, கரிகாலர் இமயத்தைத் தலை கீழாகத் திருப்பி அதன் முதுகுப் பகுதியில் புலிச் சின்னத்தை பொறித்தார். மேலும், இமயத்தில் ஒரு பாதையை ஏற்படுத்தினார், அந்தப் பாதை இன்றும் "சோழன் பாதை" என்று அழைக்கப் படுவதாகக் குறிப்பிடும் செய்திகள் சிறிது கற்பனை கலந்திருக்கலாம் என்றாலும் மகிழ்ச்சியளிக்கின்றன.

கல்லணையும் காவிரியும்

 

            கல்லணையை நேரில் கண்ட போது எங்கே அணையைக் காணோம்? ஒருவேளைப் பழைய அணை அழிந்துப் போய், ஆங்கிலேயர்கள் புதியதாக கதவுகளுடன் அணையைக் கட்டுவித்தார்களா? என்று யோசனை இருந்தது. ஆனால் பிறகுதான் தெரிந்தது, கல்லணை எனப்படுவது கலிங்கு போன்ற, நீரைத் தடுத்துத் திருப்பி விடுகிற ஒருக் கட்டமைப்புதானேத் தவிர அது நீரைச் சேமித்து வைக்கும் அமைப்பு அல்ல எனப் புரிந்தது. கல்லணையக் கட்டியதன் மூலம் கரிகாலர் 2000 ஆண்டுகள் மங்காப் புகழ் படைத்துக் கொண்டார். தமிழர் தலைமுறைகள் வாழும் வரை, இனிவரும் எல்லா நூற்றாண்டுகளுக்கும் கரிகால மன்னருக்கு, நன்றியுடன் வாழ்ந்தாக வேண்டும்.






           
             தமிழகத்தில், பாண்டியன் என்கிறப் பெயர் கொண்டவர்களை அதிகம் சந்தித்தது உண்டு, ஆனால் சோழன் என்று பெயர் வைப்பது என்பது கிட்டத் தட்ட, நடை முறையில் இல்லை என்றேக் கூறலாம். கடைசியாக (முகலாயர்கள் வருகையின் போது) தமிழகத்தில் முழுவதும் பாண்டியர்கள் ஆதிக்கம் இருந்த காரணத்தால், சோழ மன்னர்கள் பெயரை வைக்கும் மரபு அழிந்து (அல்லது அழிக்கப் பட்டு) இருக்கலாம். அடுத்த சந்ததியில் நிறையப்  பேருக்கு, செவ்வனே வாழ்ந்த சோழ மன்னர்கள் பெயரைச் சூட்ட வேண்டும். அதற்கு முதலில் தமிழ் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் வைக்கும் வழக்கம் வர வேண்டும். (இதற்கெல்லாம் யாராவது சட்டம் போட்டால் தேவலை). வட இந்தய முதியவர்களுக்கு சூட்டப் பட்டிருக்கும், பழைய., வாயில் நுழையாத.., அர்த்தமே இல்லாத...,  வட மொழிப் பெயர்களை...,  நாகரிகம் என எண்ணிக் கொண்டு, இன்றைய குழந்தைகளுக்கு சூட்டுவதாப் பெருமை? )

                காவிரித் தொடர்பாக மன்னர்கள் காலத்தில் எழுந்த சிக்கல்கள், அதனை சோழர்கள் எதிர் கொண்ட விதம், சமீப காலத்திய நதி நீர்ப் பகிர்வுப் பிரச்சனை, நீதிமன்ற தீர்ப்புகள், சாதக பாதக அம்சங்கள் எனப் பல செய்திகள் இந்த புத்தகத்தில் தொகுத்துத் தரப் பட்டிருக்கின்றன. வரலாற்றைப் படிக்கும் வாசகர்களுக்கு ஒரு நல்லப் புத்தகம். 

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :