நேதாஜி யாரெனில் - 1 / 2

நேதாஜி யாரெனில்


           நேதாஜியைப் பற்றித் தெரியாதா என்ன? நேதாஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். காந்திஜியின் கொள்கைகளோடு முரண்பாடு கொண்டவர். முத்துராமலிங்கத் தேவருடன் நட்பு கொண்டவர். INA வை உருவாக்கப் பெரிதும் தெற்காசியாவில் வாழ்ந்தத் தமிழர்களே உதவியதால், “மறுபிறவி என்று ஒன்று இருந்தால், நான் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தவர். இவ்வாறாகவெல்லாம் நமக்கு தெரிந்தவர் நேதாஜி.


            ஆனால் நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது யார், எந்த வழியில் என்றால், அது நிச்சயமாக நேதாஜிதான், ஆயுதப் போராட்ட வழியில்தான். அஹிம்சையைப் பார்த்து அச்சம் கொள்பவர்கள் ஆங்கிலேயர்கள் அல்ல. மாறாக, ஒரு வெள்ளை அதிகாரி சொன்ன வாசகம் என்னவென்றால் “ இந்தியாவில், பிரிட்டீஷாருக்கு இருக்கும் ஒரு பெரிய போலீஸ்காரர் காந்தி, மக்கள் எழுச்சியால் நிலைமைக் கட்டுக்கடங்காமல் போகும்போதெல்லாம் அதைக் காந்தியைக் கொண்டே, ப்ரிட்டிஷ்காரர்கள் அடக்கினர்” என்றார். இந்தியாவில் ராபர்ட் கிளைவ் கால் வைக்கும் சமயத்தில், வெள்ளையர்கள், அமெரிக்காவிலிருந்து தோல்வி கண்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆகவே தாம் அமெரிக்காவில் செய்தத் தவறுகள் இந்தியாவில் எந்த வடிவிலும் நடந்து விடாமல் இருக்குமாறுப் பார்த்துக் கொண்டார்கள்.

          “சுதந்திரம் என்பது, சண்டையிட்டுப் பெறுவதேயன்றி, மண்டியிட்டு வேண்டுவது அல்ல” என்றார் நேதாஜி. நாம் காந்திய வழியிலேயேப் போராடி இருந்தால், 1970 களில் நமக்கு, டொமினியன் அந்தஸ்து கொடுத்து விடுவித்திருப்பார்கள் வெள்ளையர்கள். சரி, அப்படியானால் காந்தியடிகளை இகழ்வதுதான், நேதாஜியை மரியாதை செய்வது என்பதாகுமா என்றால், நிச்சயம் இல்லை. அதை நேதாஜியே விரும்ப மாட்டார். ஏன் என்றால் “தேசப்பிதா” என்று காந்தியை முதன்முதலில் அழைத்தவர் நேதாஜி அவர்களே.

அம்பேத்கர், சர்தார் பட்டேல் போன்றோர் சுதந்திரத்திற்குப் பிறகு எவ்வாறு புகழ் பெற இயலாமல் வைக்கப் பட்டனரோ, அதேப் போன்று சுதந்திரம் கிடைக்கச் செய்வதில் நேதாஜியின் தாக்கங்கள் குறித்த செய்திகளும் இருட்டடிப்பு செய்யப் பட்டன. சுதந்திர இந்தியாவின் பிதாமகன்கள் என்று, நேருவும், காந்தியடிகளும் மட்டுமே சித்தரிக்கப் பட்டனர்.

அப்படியானால், காந்தியடிகள் சுதந்திரதிற்காக எதுவுமே செய்யவில்லையா?,
1905 ல் சுதேசி இயக்கம் மூலம், அன்னி பெசன்ட் அம்மையாரும், திலகரும் தான் முதன்முதலில் சுதந்திரப் போராட்டத்தை, ஒரு கோர்வையான மக்கள் போராட்டமாக மாற்றினார்கள். வந்தேமாதரம் பாடலை பாடிக் கொண்டு கங்கையில் மூழ்கி எழுவது அரு அடையாளமாகப் பார்க்கப் பட்டது. பிற்காலங்களில் வந்த எல்லா மாபெரும் மக்கள் போராட்டங்களுக்கு, மக்கள் திரளாகக் கலந்து கொள்வதற்கு அதுவே முன்னோடி. அதனை பின்பற்றி அமைதி வழியில், நாடெங்கும் உள்ள மக்களை ஒன்றிணைத்ததுதான், காந்தியடிகள் செய்த மகத்தானப் பணி. காந்தி என்னும் தனி நபரின் அசைவுக்கு இந்த நாடே அசைந்தது. பூனா ஒப்பந்தத்தின் போது அதனால்தான், “என் உயிர் உங்களுக்கு முக்கியம் இல்லையா? “ என்று உண்ணாவிரதம் இருந்து கொண்டிருந்த காந்திஜி வேடிக்கையாகக் கேட்ட போது, அம்பேத்கர் இப்படிச் சொன்னார் “என்ன செய்வது மக்கள் உங்களை மூடத்தனமாக பூசித்துக் கொண்டிருக்கிறார்களே”.

ஒத்துழையாமை இயக்கம் மிகப் பெரிய வெற்றி அடைந்து ஆங்கிலேயர்கள் திணறிக் கொண்டிருந்த போது அதனை திரும்பப் பெற்றதாலும், பகத் சிங்கின் மரண தண்டனையை தடுத்து நிறுத்தாததாலும், உண்மையான தேச பக்தர்கள் அவரை சரியானவர் என்று கருதவில்லை. காந்தியடிகள், தன்னைச் சார்ந்தவர்கள் முன்னிலைப் பெறுவதிலும், எந்த போராட்டமும் தனது விருப்பத்திற்கு மாறாக முடிவடையக் கூடாது என்பதிலும் கவனமாக செயல்பட்டார். நேதாஜிக்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா அவர்களை வெற்றி பெற்ச் செய்ததும், சர்தார் படேல் பிரதமர் ஆகாமல் நேரு பிரதமர் ஆனதும் உதாரணங்களே.

      சரி, ஒரு தவறானவரை தேசத்தில் உள்ள அனைவரும் எப்படிக் கொண்டாடுவார்கள்? அனைவருமே விபரம் இல்லாதவர்களா?. காந்தி சரியானவர்தானா என்ற கேள்வி வேண்டாம், காந்தியம் சரியானக் கொள்கை. கொடுங்கோலர்களான அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் போராட வைக்க, அஹிம்சைதான் சிறந்த வழி. அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலேயேக் கற்றுக் கொண்டுதான் இங்கு வந்தார். நாம் கொண்டாட வேண்டியவர், காந்தியத்தை முதலில் அறிவுறுத்திய கஸ்தூரிபா காந்தி அவர்களையே. தென் ஆப்பிரிகாவிற்கு சுதந்திரம் எப்போது கிடைத்தது என்பதையும் யோசிக்க வேண்டும்.

காந்தியடிகள் கொல்லப் பட்டதை நேதாஜி விரும்பி யிருப்பாரா? நிச்சயமாக இல்லை. நேதாஜி வலதுசாரியும் இல்லை, இடது சாரியும் இல்லை அவர் துறவி. நாடு சிறக்க வேண்டும் என்று மட்டுமே சிந்தித்த ஒரு நடு நிலைத் தேச பக்தர். “எனது நாட்டை விடுதலை அடையச் செய்ய நான் எந்த தீயவருடனும் கை கோர்க்கத் தயாராக இருக்கிறேன்” “குருதியை தாருங்கள் சுதந்திரம் தருகிறேன்” என்று கர்ஜித்தவர். காந்தியடிகள் பெயரில், நேருவின் பெயரில் தனது படையணிகளை உருவாக்கி இருந்தார். யாராலும் வெறுக்கப் படாதவர், யாராலும் தன்னுடைய நேர்மையையோ, நாட்டுப்பற்றையோ விமர்சிக்க முடியாதபடி வாழ்ந்தவர் நேதாஜி. வலதுசாரிக் கொள்கை கொண்ட சங்கங்கள், கட்சிகள், தனி நபர்கள் நேதாஜிக்கு மரியாதை செய்கிறேன் என்று காந்தியடிகளை விமர்சனம் செய்தால் அது ஒரு தவறான வழியாகும். அவர்கள் அவ்வாறு நேதாஜிக்கு மரியாதை செய்து விடாமல் இருப்பதே சிறந்தது.



நேதாஜி என்பதைத் தமிழில் மொழி பெயர்த்தால், ‘தலைவர் அய்யா” என்பதுதான் சரியாக இருக்கும். இப்படிப் பெருமையானப் பெயர் கொண்டு, முலாயம் சிங்க் யாதவை அழைப்பதில் சற்றும் உடன்பாடு இல்லை எமக்கு.
நேதாஜிதான் நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார் என்பது ஏன்?  எப்படி அவ்வாறு சொல்ல முடியும்? நமது பள்ளிக் கூட வரலாற்றுப் புத்தகங்களில், 2 பத்திகள் மட்டும்தானே நாம்  INA  பற்றியும் நேதாஜியைப் பற்றியும் படித்து இருக்கிறோம்? என்பவர்களுக்கு, நான் அதை அடுத்தப் பதிவில் சொல்கிறேன். நன்றி.

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :