பவளக்காளை



        டிராக்டருக பிரபலமானத்துக்கப்பறம் கிராமங்கள்ல எருதுமாடுங்க இல்லாமப் போயிடுச்சி. காய்ச்சல் நாட்கள்ல பசு மாட்டுக்கே தீனி (பசும்புல்) கிடைக்கிறது இல்ல. மாடுகளுக்கு தண்ணீர் கிடைக்கிறதும் சில நேரங்கள்ல பத்தாம போகுது.

பல வருசத்துக்கு முந்தி பெரியப்பாரு ஒரு சோடி எருது (உழவு மாடு) வச்சிருந்தாரு. ஏழெட்டு உருப்படி ஆடும், 3 பசுமாடும் கூட வளர்த்தாக.

அவுகளோடப் பிள்ளைக வீட்டுல இருக்கும் போது அதுல ஒரு சீவனக் கூட யாரும் வந்து விலை கேட்டுட முடியாது. அழுது  ஆர்ப்பாட்டம் பண்ணிரும் புள்ளைங்க. அதனால மாட்டை விற்கனும்னா வியாபாரிகள்லாம், பள்ளிக்கூடம் நடக்கிற சமயம் மட்டும்தான் வரமுடியும்.

அந்த சோடி எருதுல ஒருத்தன் பேரு விருவி மாடு.


(Thanks to Google images)

இன்னொருத்தன் பேரு பவளக்காளை.



இரண்டு பேருக்கும் பெயரிலேயே வித்தியாசம் இருக்குல்ல? உழவு மாடுதான்னாலும் பயபுள்ள சல்லிக்கட்டு மாடு மாதிரி. சண்டியரு. அவருக்கு குணம் தோதுபடல்லைனா ஒருத்தரும் பக்கத்துல நெருங்க முடியாது. தீவனம் கூட வைக்கறதுக்கு நெருங்க முடியாது.

பக்கத்து காட்டுக்காரகளோட மாடுங்க மேய்ச்சலுக்கு வரும்போதுதான் நம்ம நாயகன் வேலையக் காட்டுவாரு. விருவி மாடு சாந்தமான ஆளு. தானுண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பாரு. ஆனா பவளக்காளைக்கு, சண்டைப் போடறது மட்டும்தான் வேலையே.

பங்காளி மாடுகளைத் தூரத்தில பார்த்த உடனேயேத் தலைவரு கொம்பைத் தரையில தேய்ப்பாரு. நிமிர்ந்து நின்னு ரெண்டு நிமிசம் எதிரிகளையேப் பார்பாரு. நேரா கிளம்பிப் போய் சண்டைக்கு இழுப்பாரு. எதிர்ப் பக்கம் மூனு,நாளு மாடுக சேர்ந்து்கிட்டு வருங்க. ஒத்தையாளா மல்லுக்கு நிப்பாரு நம்ம பவளக்காளை. ஒருதடவக் கூடப் பின்வாங்கினப் பழக்கமேக் கிடையாது.

ஒத்தையா நம்ம கூட்டாளி சண்டைக் கட்டிட்டு இருக்கும்போது, நம்ம சொகமா மேஞ்சிக்கிட்டிருக்கக் கூடாதுன்னு விருவி மாடு துணைக்குப் போயிருவாரு பொறுமைசாளி விருவி மாட்டுக்கு, சண்டைன்னு வந்திட்டா அம்புட்டு வீரம் வந்திடும். அம்புட்டுப் பயல்களும் வாங்கடான்னுக் கூப்பிடுவாரு. ரெண்டு பேர் சேர்ந்து நாலு பேரை வெரட்டி விட்டுடுவாய்ங்க.

பள்ளிக்கூடம் படிச்சிக்கிட்டிருந்த பெரியப்பாரு மகனுக்கு, பவளக்காளை சண்டைக்கு கெளம்புனா சந்தோசமா இருக்கும். விசிலடிச்சி அனுப்பி வைப்பான். பெரியப்பாருக்கிட்ட சரியான ஏச்சு விழும். சிலசமயம் மாட்டு சண்டை மனுசாளு சண்டையா மாறிடும்.

பவளக்காளைக்கு தலைஞ்சல் (குனிய வைச்சு முழங்காலோட மூஞ்சியக் கட்டுறது, தலைய தூக்க மூடியாது) போட்டு மேய விட்டுப் பார்த்தாக. அவன் அப்பவும் அடங்கல. தலஞ்சல அவுக்கனும்னா பெரியப்பாரால மட்டும்தான் முடியும். வேற யாரும் பக்கம் கூடப் போக முடியாது.

விவசாயம் லாபமில்லைனு மாட்டையெல்லாம் வித்துப்புட்டு பெரியப்பாரே திருப்பூருப் பக்கம் போயிட்டாக.

எருத்த மாடு வைச்சு விவசாம் பண்றதெல்லாம் இப்போ ஆகிற காரியம் இல்ல.






Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :