நாடி ஜோதிடம் என்கிற பித்தலாட்டம்

யார் மனசில யாரு என்கிற நிகழ்ச்சி விஜய் டிவியில் சில வருடங்கள் முன்பு ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை நடத்துபவர் 21 கேள்விகள் கேட்பதன் மூலம், மனதில் உள்ள பிரபலத்தின் பெயரைச் சொல்வார். அதையே நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு, நமது பெயர் மற்றும் தாய்தந்தை பெயரைக் கூறிவிட்டால் அதுதான் நாடி ஜோதிடம்.

பெரியதாக ஏதாவது ஒரு சித்தர் படம் பிரேம் போட்டு வைத்திருப்பார்கள். ஓலைச்சுவடிகளில் ஒன்றுமேக் கிடையாது. நம் வாயிலிருந்தே பல குறிப்புகளைப் பெற்று, நமக்கே பெயர்களைக் கண்டு பிடித்து விட்டதாக அல்வா கொடுப்பதுதான் திறமை. நமது வாயிலிருந்தேப் பெயர்கள் கணிக்கப் பட்டன என்பது தெரியாமல், நாம் அடடே, நம்மைப் பற்றிக் கூட ஓலையில் எழுதி இருக்கிறார்களே எனப் பரவசமடைந்து விடுகிறோம். காதில் சுற்றி உள்ளப் பூ, வெளியே வந்த பிறகுதான் உரைக்கிறது.


பின்வருமான கேள்விகள் 70, 80 முறை கேட்கப்படும்.
1. நான்கெழுத்துப் பெயரா?
2. முருகன் அல்லது பெருமாள் பெயரா?
3. அம்மன் பெயரா?
4. நீங்கள் கடைசி பிள்ளையா?
5. துணைக்காலில் பெயர் முடியுமா?
6. வடமொழி எழுத்து வருமா?
7. இரண்டாகப் பிரிக்க முடியுமா?
8. கடைசி எழுத்து ன், ள் என (ல, லா, லே, லை போன்றவைகளில்) முடியுமா?
9. திருமணம் ஆகிவிட்டதா?
10. வயது என்ன? (ரகசியமாக சென்று அந்த வருடப் பஞ்சாங்கம் பார்த்து, தமிழ் மாதம் மற்றும் வருடத்தைப் போட்டு வாங்க)
11. நீங்கள் சூரிய உதய சமயத்தில் பிறந்தீர்களா?
12. ராசி ரிசபமா? நட்சத்திரம் பரணியா?
13. உயிரெழுத்தில் தொடங்குமா?
14. வல்லின எழுத்துக்கள் வருமா?

இன்னும் பல கேள்விகள் கேட்பார்கள். நாம் என்ன நடக்கிறது எனப் புரிந்து கொள்ளாமல் மொத்த ஜாதகத்தையுமே சொல்லிவிட்டு இருப்போம்.  பிறந்த நேரம் தெரிந்து விட்டால் செல்போன் சாப்ட்வேர் முலம் ராசிக் கட்டம் கிடைத்து விடும்.


அதன் பிறகு, நாம் சொன்ன தகவல்களைக் கொண்டு, ஓலைச்சுவடியைப் பிடித்து விட்டதாகவும், அதில் ஒவ்வொரு வரிக்கும் ஒரு ரகசிய, மறைமுகப் பொருள் இருப்பதாகவும் கதையளந்து 5 பக்கங்களுக்கு அதனைப் பாடலாக எழுதுகிறார்கள். சினிமாப் பாடலாசிரியர்களிடம் நடிகர், நடிகையின் பெயர், காட்சியமைப்பை இயக்குநர் சொல்லிப் பாட்டெழுதுவது போன்ற கலைதான் அது.

நான்கெழுத்து, 60 வயது, இந்து பெண்மனி, நடுவில் மெய்யெழுத்து, இறுதியில் துணைக்கால் என்றெல்லாம் குறிப்பு கொடுத்தப் பின் 4, 5 பெயர்கள்தான் தேறும். அவற்றில் ஒன்றை அள்ளிவிடுவார்கள். தப்பு என்போம், அப்ப இந்த சுவடி இல்ல என்பார்கள் அடுத்த சில நிமிடங்களில் ஆப்ஷனில் உள்ள இரண்டாவது பெயர் கூறப்படும். அதிசயித்துப் போய்விடுவோம்.

நீங்கள் முக்கியமாக எந்தக் கேள்வியைக் கேட்பீர்களோ அதனைத்தனி காண்டம் முலம் பார்க்க வேண்டும் என்பார்கள். அதற்கும் ஒரு கணிசமான தொகை செலவாகும் என்பார்கள். ஏமாற்றும் வேலையே தவிர வேறொன்றும் இல்லை. "ஊருக்கு ஊர் வைத்திருக்கிறார்களே.., அது எப்படி சாத்தியம்? மூலச்சுவடி ஒன்றுதானே இருக்க முடியும்?" என்று கேட்டால், அந்தந்த மண்டல மண்ணில் பிறப்பவர்களுக்கான சுவடிகளை, அந்த சோதிடர்கள் பிரதி எடுத்து சென்று இருக்க வேண்டும் என்கிறார்கள். சக திருடனின் பிழைப்பு கெடக் கூடாது அல்லவா?

திருவள்ளுவருக்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு? சிலர் வள்ளுவர் வழி வந்ததாக காட்டிக் கொள்வதற்காக, அறியாமையால் அவர் படத்தைப் போட்டுக் கொள்கிறார்கள். அவரும் சித்தர்தான். அவர் வாழ்க்கை நெறிகளைச் சொன்னாரே தவிர, ஜோதிடம் பார்த்து ஊரை ஏமாற்ற சொல்லவில்லை.

தமிழ் சித்தர்கள் சக்தி மிக்க மகான்கள் வாழ்ந்தது உண்மை. அவர்கள் பெற்று இருந்த மகத்துவங்கள் ஏராளம். அவர்கள் பெயர்களைச் சொல்லி ஏமாற்றுவதால் பாவமே சேரும்.

பெயரைக் கண்டுபிடிக்கும் கலையை பழக்கப் படுத்த சில வருட பயிற்சி, நுட்பமான யூகிக்கும் அறிவு தேவை. அதற்காக 100 ரூபாயும், ராசிக் கட்டத்தை செல்போனில் ரகசியமாகப் பார்த்து விட்டு வந்து அதை மனப்பாடமாக வரையும் கலைக்காக 100 ரூபாயும் சேர்த்து, அதிகபட்சம் நாடி ஜோதிடத்திற்காக ரூபாய் 200 மட்டும் தரலாம். அதற்கு மேலாக தருவது நாம் நல்ல ஏமாளி என்பதற்கு அர்த்தம். தமிழகத்தின் பிரபல சிவ ஆலயம் ஒன்றின் வாசலில் இருக்கும் நாடி ஜோதிட நிலையத்தின் அனுபவம்தான் இப்படி.

அதற்கு பதிலாக, நமது ஊரிலேயே உள்ள ஜோதிடரிடம், நமது கம்ப்யூட்டர் ஜாதகத்தைக் காண்பித்து, நூற்றியொரு ரூபாய் தட்சிணையில் நாடி ஜோதிடத்தைவிட சிறப்பாக பலன்களை தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.





Comments

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :