நீதித்துறை சீர்திருத்தம்

இந்திய நீதிமன்றங்களுக்கு 3 மாத கோடை விடுமுறை. இந்த வழக்கம் வெள்ளை துரைமார்களுக்கு வெயில் ஒத்துக் கொள்ளாது என்பதால் ஏற்படுத்தப்பட்டது. இந்திய துரைமார்கள் அதை அப்படியே பின்பற்றுகிறார்கள். இவர்கள்தான் நீதியை நாட்டில் நிலைநாட்டுகிறார்களாம்.



கேட்டால், நாங்கள் வீட்டில் இருந்தாலும் பணி ஆற்ற வேண்டும் தெரியுமா? என்பார்கள். அதையே அலுவலகத்திற்கு வந்து ஆத்தலாம் இல்லையா?. இவ்வளவு வழக்குகள் தேக்கி வைத்துக் கொண்டு, வெட்கமே இல்லாமல் இவ்வளவு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாமா?. வெள்ளைக்காரர்களின் வம்சமாக இருந்தால் தேவைப்படலாம். இந்திய வம்சாவளிகளுக்கு எதற்கு?

ஒரு நாளைக்கு 150, 300 வழக்குகளை விசாரிக்கிறோம் என்பார்கள். அதில் 98% சும்மாவே வாய்தாவை மாற்றி வைப்பதாக இருக்கும். நாம் வழக்குப் பட்டியலைப் பார்த்து விட்டு, அய்யோ பாவம் 'நிதி'பதி கடுமையாக உழைக்கிறார் என்று நினைப்போம். ஒரு நிதிபதி "வீட்டில் அமர்ந்து வழக்கு கோப்புகளைப் படிக்கிறோம், தீர்ப்புகளை வீட்டில் அமர்ந்துதான் வடிக்கிறோம் எங்களுக்கு நேரமே போதவில்லை" என்று எழுதி இருந்தார். படித்தால் சிரிப்பு வந்தது.

பாராளுமன்றத்தில் அமளி செய்து கும்மி அடித்து நீங்கள் வேலையே செய்யாமல் சம்பளம், கிம்பளம் என குவித்துக் கொள்ளுங்கள். ஏன் இவ்வளவு நாட்கள் வெட்டியாய் சம்பளம் வாங்குகிறீர்கள் என நீதித்துறை கேட்காது. அதேபோல், வேலையே இல்லாமல் 3 மாத ஓய்வு உனக்கெதற்கு? என்று பாராளுமன்றம் நீதித்துறையை கேட்டுவிடக் கூடாது. இதையே "நீதித் தன்னாட்சி" என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.

நீதித்துறையை சீர்திருத்த வேண்டும் என்று ஒரு விதியை நாம் யோசித்தால், அந்த விதி ஏற்கனவே இருக்கும். ஆனால் நடைமுறை வேறாக இருக்கும்.

அரசாங்க மருத்துவமனை சரி இல்லையென்றால், தனியார் மருத்துவமனைக்கு போகலாம். அரசாங்கப் பள்ளி சரியில்லை என்றால் தனியார் பள்ளிக்கு போகலாம். ஆனால் அரசு நடத்தும் நீதிமன்றம் சரிஇல்லை என்றால், வேறெங்கும் செல்ல முடியாது. அதற்காகவே, யார் தலையீடுமின்றி சிறப்பாக செயல்படுவதற்காக நீதித்தன்னாட்சி வழங்கப்பட்டுள்ளது. தன்னைத்தானே நிர்வகிக்கும், சீர்படுத்தும் அதிகாரமே அது.

வெள்ளைக்காரர்கள் தந்த சட்டத்தைத்தான் நாம் இன்னமும் பின்பற்றுகிறோம். ஆனால் இங்கிலாந்தில் நீதி வழங்குவதில் தாமதமில்லையே? நாம் வெள்ளைக்காரர்களின் தீய பழக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு நல்ல விசயங்களை தூர வீசிவிடுவோம்.

தன்னாட்சி கொண்ட நீதித்துறை சரியாக வேலை செய்தால், நாட்டில் நடக்கும் சீர்கேடுகள் பாதியாவது குறைந்திருக்க வேண்டும் அல்லவா? ஏன் நாளுக்குநாள் லஞ்சம், ஊழல் கூடிக்கொண்டே போகிறது? ஏன் சமூகத்தில் குற்றங்கள் பெருகிக் கொண்டே போகின்றன? யார் பொறுப்பாளி? எப்போது இந்த நிலை மாறும்?

Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :