ஸ்ரீமுஷ்ணம் ஆலயம்

ஸ்ரீ முஷ்ணம் என்றதும் நாம் அனைவரும் பூவராகப் பெருமாள் பற்றி அறிவோம். அரச மர உருவில் இருப்பதாகக் கருதப் படும் பெருமாள் பற்றியும் அறிவோம். ஆனால், பூவராகப் பெருமாள் ஆலயத்தின் மதிலை ஒட்டியவாறு அமைந்து உள்ள சிவன் கோவில் பற்றி பெரிதும் பேசப் படுவதில்லை. 

இந்த ஆலயம் மிகவும் பழமையானது என்பது, அதன் செங்கல் சுவரால் கட்டப் பட்டு உள்ள மதில் சுவரைப் பார்க்கும் போதேத் தெரிந்து விடும். பலரும் இந்த ஆலயம் பற்றி தங்களது வலைப் பக்கங்களில் எழுதி உள்ளனர். 

பூவராக சுவாமியைத் தரிசிப்பவர்கள் எத்தனைப் பேர், அந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள இந்த சிவாலயத்தை தரிசிப்பார்கள் என்பது கேள்விக்குறியே..!



(தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் ஆலயம் )

இந்த கோவிலில் சுந்தரர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மானக்கஞ்சார நாயனார் பதிகம் பாடி, இறைவனிடம் விண்ணப்பம் செய்ததாக வரலாறு உண்டு. ஆனால் இந்த ஆலய இறைவனை பற்றிப் பாடப் பட்டத் தேவாரப் பாடல்கள் எதுவும் கிடைத்ததாகத் தகவல் இல்லை. 



(சோழர் கட்டுமானம்)

மேலும் இரண்டாம்குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது, பெருமாள் ஆலயம் மற்றும் சிவன் ஆலயம் ஆகியவற்றிற்கான நிலத்தகராறு ஏற்பட்டு அதனைத் தீர்த்து வைத்ததாகவும் குறிப்புகள் உண்டு. 

இறைவன் சன்னதியின் சுவர்களில் நிறைய தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. அவை கூறும் தகவல்கள் என்ன? என்பது படி எடுக்கப் பட்டு உள்ளதா?எனத் தெரியவில்லை.  வரலாற்று ஆய்வாளர்கள் ஒருமுறை அவற்றைப் படித்துப் பார்ப்பது நல்லது.

பின்னர் வந்த நாயக்க மன்னர்கள் பெரும்பாலும் வைஷ்ணவர்களாக இருந்ததால் இந்த சிவ ஆலயம் முக்கியத்துவம் இழந்து இருக்கலாம். பூவராகப் பெருமாள் கோவிலில் காணப்படும் தெலுங்குக் கல்வெட்டுகள் இங்கு இல்லை. ஆலயத்திற்கு ராஜ கோபுரம் கூட இல்லை.  ஆகவே இந்தக் கோவில், சோழர் வீழ்ச்சிக்குப் பிறகு வரலாற்றில் புறக்கணிக்கப் பட்ட கோவில் என்பது உறுதி. 


நித்தீசுவரர் சமேத பிருகன்நாயகி ஆலயத்தின் கொடி மரம். 


சர்ப்பரிஷி என்கிற முனிவரின் சன்னதி அமைந்து உள்ளது. இதன் வரலாறு என்ன? எனக் கேட்டு அறிந்து கொள்ள எண்ணிய போது ஆலயத்தில் ஒருவர் கூட இல்லை. சன்னதியைத் திறந்து வைத்து விட்டு சென்று விடுகின்றனர். தல வரலாறினை எழுதி, ஒரு தகவல் பலகை அமைக்க வேண்டியது அவசியம்.  இங்கு வீற்றிருக்கும் முருகரை,அருணகிரி நாதர் தமது திருப்புகழில் பாடி இருக்கிறார். 




நிறைய சொத்துக்கள் நிச்சயமாக இந்த ஈசனுக்கு வழங்கப்பட்டு இருக்கும். அவற்றைக் கொண்டு, தொல்லியல் துறை மற்றும் அற நிலையத் துறை ஆகியவை, விரிசல் கண்டுள்ள மதில் சுவரினை, அதன் தொன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். கடைசியாக எப்போது குடமுழுக்கு நடை பெற்றது? என்கிறத் தகவல் ஏதுமில்லை. அவ்வப்போது குடமுழுக்கு நடத்துவதும் அவசியம். 

வையத்தில் சைவம் தழைத்தோங்குக..!



Comments

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :